கோவையில் நிபா வைரஸ் பரவுகிறதா? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
Kerala Nipah Virus Outbreak : கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், கோவை ஆட்சியர் பவன் குமார் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கி இருக்கிறார். கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் எனவும் ஆட்சியர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை, ஜூலை 11 : அண்டை மாநிலமாக கேளராவில் (Kerala Nipah Virus Outbreak) நிபா வைரஸ் (Nipah Virus) பரவி வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டட ஆட்சியர் (Coimbatore) பவன் குமார் மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், கோவை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 2025 ஜூலை மாதத்தில் இருந்தே கேரளாவில் நிபா வைரஸ் தீயாய் பரவி வருகிறது. மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கேரளாவில் 499 பேர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 203 பேர் மலப்புரம் மாவட்டத்திலும், 116 பேர் கோழிக்கோட்டிலும், 178 பேர் பாலக்காட்டிலும், இரண்டு பேர் எர்ணாகுளத்திலும் உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் 11 பேரும், பாலக்காட்டில் 3 பேரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட 56 பேருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
கேரளா மாநிலத்திற்கு எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம். எனவே, கோவை மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read : கேரளாவில் தீயாய் பரவும் நிபா வைரஸ்.. கண்காணிப்பில் 425 பேர்… மாநில அரசு நடவடிக்கை!




கடுமையான காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். நிபா வைரஸ் தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக சுகாதாரத்துறையும் நிபா வைரஸ் குறித்து அறிவுறுத்தி இருந்தது- அதாவது, தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகவில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருந்தாலும், பொதுமக்கள் பதற்றமின்றி, விழிப்புடன் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Also Read : தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.. இருப்பினும் இதனை பின்பற்ற வேண்டு – பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..
நிபா வைரஸ்
நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் தொற்று நோயாகும். இது பழ வகை வவ்வால், பன்றிகள் போன்ற விலங்குகளிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. மாசுப்பட்ட பழங்களை சாப்பிடுவதாலும், நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமாக நிபா தொற்று பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், தூக்கமின்மை, மூச்சுத்திணறல், வலிப்பு போன்றவை நிபா வைரஸின் அறிகுறிகளாகும். நிபா வைரஸுக்கு இதுவரை எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கவில்லை. முழுமையான சிகிச்சை மூலமாக மட்டுமே இது குணப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.