கொளுத்தும் வெயில்.. 9 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இனி இப்படி தான் இருக்கும்..

Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.8 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கொளுத்தும் வெயில்.. 9 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இனி இப்படி தான் இருக்கும்..

கோப்பு புகைப்படம்

Published: 

06 Jul 2025 13:55 PM

வானிலை நிலவரம், ஜூலை 6, 2025: தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர், அவலாஞ்சி, பார்வர்ட், நடுவட்டம் ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கோவை மாவட்டம் சின்னகல்லார், சின்கோனா, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி, சோலையார், மேல் பவானி உள்ளிட்ட இடங்களில் இரண்டு சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 6 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையானது வரும் 2025 ஜூலை 12ஆம் தேதி வரை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை:


இது ஒரு பக்கம் இருக்க வெப்பநிலையின் தாக்கமும் அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்பநிலை என்பது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரித்து பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் சதமடித்த வெயில்:

தமிழகத்தின் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மழையின் தீவிரமானது வெகுவாக குறைந்த நிலையில் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 38.3 டிகிரி செல்சியஸும், திருச்சியில் 38.5 டிகிரி செல்சியஸும், பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியஸும், கடலூரில் 38 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

சென்னை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.8 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கரூர் பரமத்தியில் இயல்பை விட 4.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து பதிவாகியுள்ளது