IPL 2025: பிளே ஆஃப் தொடும் கனவில் லக்னோ… தட்டி விடுமா ஹைதராபாத்..? பிட்ச் ரிப்போர்ட் எப்படி..?
SRH vs LSG: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி, லக்னோவின் ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. குறைந்த ஸ்கோரிங் பிட்ச் மற்றும் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன், டாஸ் வென்ற அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. லக்னோ அணி பிளே-ஆஃப் நுழைய இந்தப் போட்டியில் வெற்றி அவசியம். ஹெட்-டு-ஹெட் போட்டிகளில் லக்னோ அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 61வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 19ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏற்கனவே ஐபிஎல் 2025ல் (IPL 2025) இருந்து வெளியேறிவிட்டது. ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி பிளே ஆஃப் பந்தயத்தில் நீடிக்க விரும்பினால், இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். தற்போது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்தநிலையில், ஏகானா ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட், ஹெட் டூ ஹெட், வானிலை எப்படி உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஏகானா ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி..?
ஏகானா ஸ்டேடியத்தில் பிட்சானது பொதுவாக குறைந்த ஸ்கோரிங் பிட்சாக கருதப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் பிட்சும் ஸ்லோவாக இருக்கும், அதிக பவுன்ஸும் இருகாது. அதன்படி, இந்த பிட்சில் 180 முதல் 190 வரையிலான ஸ்கோரே வெற்றிக்கு போதுமானதாக கருதப்படுகிறது. அதன்படி, இந்த ஸ்டேடியத்தில் டாஸ் வெல்லும் அணிகள் பெரும்பாலும் முதலில் பந்து வீச முடிவு செய்யும். இதற்கு காரணம் இரவில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதுதான்.
ஏகானா ஸ்டேடியத்தில் இதுவரை 19 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 8 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 10 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியானது முடிவில்லாமல் முடிந்தது.
வானிலை எப்படி..?
கோடைக்காலம் என்பதால் உத்தரபிரதேசத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. அதன்படி, இன்றைய நாளில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இரவில் வெப்பநிலையில் 33 டிகிரி வரை குறைந்து, ஈரப்பதம் 31 முதல் 46 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானம் தெளிவாக இருக்கும், மழைக்கான எச்சரிக்கை என்பது எதுவும் இல்லை.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில், ஒரு போட்டியில் ஹைதராபாத் அணியும், மற்ற அனைத்து போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிம் வெற்றி பெற்றுள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ராம், ஆயுஷ் படோனி, ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி, சச்சின் பேபி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், ஜெய்தேவ் உனட்கட், ராகுல் சாஹர், ஜீஷன் அன்சாரி, இஷான் மலிங்கா.