India – Australia T20 Series: கடைசி போட்டியில் ஆடாமல் வெற்றி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!
IND vs AUS 5th T20: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய அணி மெல்போர்னில் நடந்த 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், 3வது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா (India – Australia T20 Series) அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டியானது டாஸ் போடப்பட்டு 4.5 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி (Indian Cricket Team) 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பிறகு, மின்னல் மற்றும் மழை குறுக்கிட்டதால் போட்டியை மீண்டும் தொடங்க முடியாத சூழல் உண்டானது. இதன் காரணமாக, 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் டி20 தொடரில் தனது தோல்வியற்ற சாதனையை மீண்டும் தொடர்ந்தார்.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெறும்..? இடத்தை பட்டியலிட்ட பிசிசிஐ!
போட்டியில் நடந்தது என்ன..?
பிரிஸ்பேனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காபா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்ற 5வது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா துவக்கியபோது, இருவரும் தொடக்கத்திலிருந்தே தங்கள் பேட்டிங் மூலம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்மூலம், முதல் 2 ஓவர்களில் இந்திய அணி 19 ரன்கள் எடுத்தது. இதன் தொடர்ச்சியாக, 4 ஓவர்களுக்குள் 47 ரன்களை கடந்தது.
5வது ஓவரின் 5வது பந்து வீசப்பட்ட பிறகு, பலத்த மழை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் போட்டி மீண்டும் தொடங்க முடியாததால், ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, தொடரின் முதல் போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டது.
ALSO READ: ஐசிசி வைத்த செக்! 2028 ஒலிம்பிக்கில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாதா..?
2-1 என தொடரை வென்ற இந்தியா:
🚨 The 5th T20I has been called off due to rain.#TeamIndia win the series 2-1 🏆
Scorecard ▶️ https://t.co/V6p4wdCkz1#AUSvIND pic.twitter.com/g6dW5wz1Ci
— BCCI (@BCCI) November 8, 2025
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய அணி மெல்போர்னில் நடந்த 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், 3வது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் அபாயகரமான பந்துவீச்சால் இந்தப் போட்டி வெற்றி பெற்றது. பின்னர் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்தியா தொடரில் 2-1 என முன்னிலை வகித்ததால், பிரிஸ்பேன் டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது. இது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. இதன் விளைவாக, இந்திய அணி தொடரை 2-1 என வென்றனர்.