Pakistan Fake Football Team: கால்பந்து வீரர்கள்போல் நாடகம்.. ஜப்பானில் காலுன்றிய போலி கால்பந்து அணி நாடு கடத்தல்!

Fake Pakistan Football Team: பாகிஸ்தானின் சியால்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்கு பயணித்த இந்த கால்பந்து அணியில் மொத்தம் 22 பேர் இருந்துள்ளனர். இந்த அனைத்து பாகிஸ்தானியர்களும் ஜப்பானில் கைது செய்யப்பட்டு அவர்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Pakistan Fake Football Team: கால்பந்து வீரர்கள்போல் நாடகம்.. ஜப்பானில் காலுன்றிய போலி கால்பந்து அணி நாடு கடத்தல்!

போலி பாகிஸ்தான் கால்பந்து அணி

Published: 

17 Sep 2025 16:49 PM

 IST

2025 ஆசிய கோப்பையின்போது (2025 Asia Cup) இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான போட்டிக்குபிறகு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இத்தகைய செயல்களை செய்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தெரிவித்தார். அதேநேரத்தில், இது தங்களுக்கு அவமானம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறிவந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் கால்பந்து வீரர்களை போன்று போலி கும்பல் ஒன்று ஜப்பானுக்கு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ALSO READ: இது எங்களுக்கு அவமானம்! இந்திய அணிக்கு எதிராக புகார்.. ஐசிசியிடம் சென்ற பாகிஸ்தான் அணி!

என்ன நடந்தது..?

ஜப்பான் விமான நிலையத்தில் ஒரு போலி பாகிஸ்தான் கால்பந்து அணியை ஜப்பான் விமான நிலைய அதிகாரிகள் பிடித்து நாடு கடத்தியுள்ளனர். மேலும், இது குறித்து பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதாவது, தொழில்முறை கால்பந்து வீரர்களாக காட்டி கொண்டு ஜப்பானுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பாகிஸ்தானியர்களை ஜப்பான் அதிகாரிகள் சோதனையின்போது கண்டுபிடித்தனர்.

பாகிஸ்தானின் சியால்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்கு பயணித்த இந்த கால்பந்து அணியில் மொத்தம் 22 பேர் இருந்துள்ளனர். இந்த அனைத்து பாகிஸ்தானியர்களும் ஜப்பானில் கைது செய்யப்பட்டு அவர்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பயணத்தின்போது போலி கால்பந்து குழு பாகிஸ்தான் நாட்டின் கால்பந்து உடையில் பாகிஸ்தான் கால்பந்து சம்மேளன அனுமதியுடன் வந்ததாக தெரிவித்தனர். அப்போது, அவர்களிடம் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட போலியான தடையில்லா சான்றிதழ்களை வைத்திருந்தனர்.

ALSO READ: சூதாட்ட செயலி வழக்கு.. உத்தப்பா, யுவராஜ் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

ஜப்பானுக்கு பயணிக்க காரணம் என்ன..?


ஜப்பானுக்கு பாகிஸ்தானியர்கள் பயணித்த வழக்கில் மாலிக் வகாஸ் முக்கிய குற்றவாளியாக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பு அடையாளம் கண்டுள்ளது. இப்போது, மாலிக் வகாஸ் கைது செய்யப்பட்டு குஜ்ரன்வாலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் வகாஸ் ‘ கோல்டன் ஃபுட்பால் ட்ரையல்’ என்ற கால்பந்து கிளப்பை உருவாக்கி, வீரர்களை போல நடிக்க கற்று கொடுத்தது தெரியவந்தது. வெளிநாடுகளுக்கு செல்ல உதவுவதற்காக ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் மாலிக் வகாஸ் 4 மில்லியன் ரூபாய் வசூலித்துள்ளார். இதுகுறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றன.