Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shani Pradosham: மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?

மே மாதம் 2 நாட்கள் சனிக்கிழமைகளில் பிரதோஷம் வருகிறது. இத்தகைய சனி பிரதோஷம், சைவ சமயத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறத்யு. சனிக்கிழமை பிரதோஷத்தில் சிவனை வழிபடுவது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும் என நம்பப்படுகிறது. ஆலகால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை என்பதால் இதன் முக்கியத்துவம் அதிகம் என சொல்லப்படுகிறது.

Shani Pradosham: மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?
சனி பிரதோஷம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 Apr 2025 11:00 AM

சைவ சமயத்தில் சிவபெருமானை (Lord Shiva) வழிபடுவதற்கு உகந்த நாள்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது பிரதோஷம். இந்தப் பிரதோஷ தினமானது வளர்பிறை மற்றும் தேய்பிறையில் ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதியில் வருவது வழக்கம். இது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிழமைகளில் வந்தாலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. மற்ற நாட்களில் வரும் பிரதோஷ வழிபாட்டை விட சனிக்கிழமைகளில் வரும் வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயிரம் மடங்கு பலன் பெறலாம் என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு (Lord Shani Dev) உரிய தினம் என்பதால் அன்றைய நாளில் வரும் இந்த சிறப்பு தினத்தில் சிவபெருமானையும் சேர்த்து விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்க்கையில் பல நன்மைகள் கைகூடும் என சொல்லப்படுகிறது. சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தில் சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் ஐந்து வருடங்கள் சிவாலயம் சென்று தினமும் வழிபட்டால் கிடைக்கும் புண்ணியத்திற்கு சமம் என சிவனடியார்கள் கூறுகின்றனர்.

இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் இந்த பிரதோஷ தினமானது வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகியவற்றில் சனிக்கிழமை வருவது ஆன்மிக அன்பர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 2025, மே 10 மற்றும் மே 24 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் திரயோதசி திதி வருகிறது.

சனிப்பிரதோஷத்தின் பின்னணி

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும்போது ஆழகாலம் என்ற விஷம் வெளிப்பட்டது இதனைக் கண்டு அஞ்சிய அவர்கள் சிவபெருமானிடம் தங்களை காக்கும்படி வேண்டினர் அவர்களுக்காக மனம் இறங்கிய ஈசன் ஆலகால விஷத்தை உண்டார். அந்த விஷமானது சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகில் இருந்த பார்வதி அவரது கழுத்தை இறங்கப் பிடித்தார் இந்த ஆலகால விஷம் சிவபெருமானின் கழுத்தினை நீல நிறமாக மாற்றிவிட்டது என புராணத்தில் சொல்லப்படுவது உண்டு. அப்படியாக அவர் அந்த நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை எனவும் அதனால்தான் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது.

பிரதோஷ காலம்

பிரதோஷ காலம் என்பது மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் சிவன் கோயில்களில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வாங்கி வழிபட்டால் வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பிரதோஷ வழிபாடு முடிந்தவுடன் சிவபெருமானின் வாகனமாக அறியப்படும் நந்தி பகவானின் காதில் நம்முடைய வேண்டுதலை சொன்னால் விரைந்து அது நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது. மற்ற நாட்களில் சிவபெருமானுக்கு மட்டும் அபிஷேகம் ஆராதனை செய்யப்படும் நிலையில் பிரதோஷ தினத்தில் அவரது வாகனமாக அறியப்படும் நந்தி பகவானுக்கும் அனைத்து வழிபாடுகளும் மேற்கொள்ளப்படும் என்பது சிறப்பானதாகும்.

(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்களின் அடிப்படையில் இந்த கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)