Shani Pradosham: சனி பிரதோஷ நாளில் நாம் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் கொண்டாடப்படும் சிவ வழிபாட்டு நிகழ்வாகும். இதில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, புதிய ஆடைகள் அணிந்து பூஜை செய்ய வேண்டும். மேலும் வில்வ இலைகள், பூக்கள், பழங்கள், இனிப்புகள் வைத்து வழிபாடு செய்யலாம்.

பொதுவாக பஞ்சாங்கத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் 14 வகையான திதிகள் வருகிறது. இதில் திரயோதசி திதியானது பிரதோஷமாக கொண்டாடப்படுகிறது. சைவ மரபில் பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபடுவதற்கு மிகச்சிறந்த ஒரு காலமாக பார்க்கப்படுகிறது. இந்தத் திரயோதசி நாளில் மாலையில் 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலகட்டமாக வழிபாடு செய்யப்படுகிறது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்த பொழுது அதிலிருந்து வெளிப்பட்ட ஆலகால என்னும் விஷத்தை சிவபெருமான் உண்டு இந்த உலகை காத்தார். அதே சமயம் விஷம் அவரது வயிற்றினை அடையாமல் இருக்க பார்வதி தேவி அவரது கழுத்தினை இறுக பிடிக்க சிவபெருமானின் கழுத்து நீல நிறமாக மாறிவிட்டது. இந்த சம்பவம் நடந்தது திரயோதசிநாளில் என்பதால் அந்த நாள் பிரதோஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோயில்களில் விசேஷ வழிபாடு
இந்த நாளில் அனைத்து கோயில்களிலும் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு கோயிலில் நடைபெறும் விழாவிலும் பங்கேற்று சிவபெருமானையும் அவரது வாகனமான நந்தி பெருமானையும் வழிபடுவார்கள். இப்படியான நிலையில் இத்தகைய பிரதோஷம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளில் வருவது மிகவும் விசேஷமானதாகும். அதில் சனிக்கிழமை என்பது சனி மகா பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. இன்னாளில் நாம் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என்பது தொடர்பான தகவல்களை காணலாம்.
என்ன செய்யலாம், செய்யக்கூடாது?
முதலில் செய்யவேண்டிய விஷயங்கள் பற்றி காணலாம். சனி பிரதோஷ தினத்தில் அதிகாலையில் எழுந்து பக்தர்கள் புனித நீராட வேண்டும். தொடர்ந்து புதிதாக அல்லது நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து வீட்டில் பூஜையை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக வீடு சுத்தப்படுத்தப்பட்டு பூஜைக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். வீட்டில் சிவபெருமான் புகைப்படம் இருந்தாலோ அல்லது விளக்கை சிவபெருமானாக நினைத்து பூஜையை மேற்கொள்ளலாம். இந்த பூஜையில் சிவபெருமானுக்குரிய வில்வ விலை கட்டாயம் இருக்க வேண்டும்.
அதேசமயம் மற்ற பூக்கள், பழங்கள், இனிப்புகள் வைத்தும் வழிபடலாம். கற்பூரம் காட்டிவிட்டு பின்னர் அந்த உணவுப் பொருட்களை எடுத்து பகிர்ந்து உண்ணலாம். பிரதோஷ தினத்தில் காலை வழிபடுவதை காட்டிலும் மாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் வழிபடுவது சால சிறந்ததாக நம்பப்படுகிறது. சிலரால் அந்நேரத்தில் கோயிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டால் அவர்கள் வீட்டில் வழிபடலாம்.
சனிக்கிழமை சனிபகவானுக்கு உரிய தினம் என்ற நிலையில் அந்த நாளில் பிரதோஷம் வருவது சிவபெருமானை மட்டும் அல்லாது சனி பகவானையும் சேர்த்து வழிபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் தான தர்மம் செய்வது மிகப்பெரிய புண்ணியத்தை அளிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் யாரிடமும் வீண்வாக்குவாதம், தகாத வார்த்தைகளை பேசுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இந்த நாள் முழுக்க சிவ மந்திரம், சிவனின் பாடல்களை ஜெபித்து நாம் பிரார்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
பிரதோஷ நாளில் விரதம் இருப்பவர்கள் கட்டாயம் அதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கோயிலில் சென்று வழிபடுபவர்கள் பூஜைக்குரிய பொருள்களை வாங்கி கொடுப்பது நன்மை பயக்கும்.
செய்யக்கூடாதவை
இத்தகைய நாளில் வீட்டின் சமையலில் வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவற்றை தவிர்க்கலாம். அதேபோல் விரதம் இருப்பவர்கள் உப்பை தவிர்க்க வேண்டும். நாள் முழுவதும் அமைதியான முறையில் மனதில் ஆன்மீக சிந்தனை மட்டுமே இருக்கும்படி செயல்பட வேண்டும். கோபப்படும்படி யார் நடந்தாலும் நிதானத்தை கடைப்பிடித்து அவர்களை எதிர் கொள்ள வேண்டும். இந்த நாளில் அசைவ உணவுகள், மது பொருட்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். பூஜை வழிபாடு செய்யும் போது வட கிழக்கு திசையை நோக்கி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. மாற்று திசையில் அமர்வது அசுபமாக கருதப்படுகிறது.
(சாஸ்திரத்தின் அடிப்படையிலான தகவல்கள் அனைத்தும் இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)