Mahalaya Amavasaya: மஹாளய அமாவாசை.. இந்த காய்கறிகளை உணவில் சேர்க்காதீங்க!
2025 ஆம் ஆண்டு மஹாளய அமாவாசை செப்டம்பர் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான இந்த நாளில், பித்ரு தர்ப்பணம் என்பது செய்ய வேண்டும். அதேபோல் வீட்டில் முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட வேண்டும். அதில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றிக் காணலாம்.

மஹாளய அமாவாசை
இந்து சாஸ்திரத்தில் அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி மற்றும் தை ஆகிய மூன்று மாதங்களில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகும். மற்ற அமாவாசை நாட்களில் நீங்கள் முன்னோர்களை வழிபடா விட்டாலும் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று மாத அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாடு என்பது இருக்க வேண்டும் என சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. இந்த மூன்று அமாவாசைகளும் பித்ருலோகத்தில் இருந்து முன்னோர்கள் பூலோகத்தை நோக்கி நம்மை காண்பதற்கு நம்மிடையே வாழ்வதற்கு வருகை தருவார்கள் என நம்பப்படுகிறது. இத்தகைய அமாவாசை நாளில் நாம் அருகில் உள்ள நீர்நிலைகளில் திதி மற்றும் தர்ப்பணம் ஆகியவை கொடுத்து வீட்டில் முன்னோர்களுக்கு பிடித்தமான பொருட்களைக் கொண்டு படையலிட்டு வழிபட்டால் அதன் பலன்கள் பல தலைமுறைகளுக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
2025 மஹாளய அமாவாசை
அப்படியாக 2025 ஆம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை செப்டம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது அமாவாசை நாளில் ஆண்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும் சுமங்கலி பெண்களாக இருந்தால் எந்தவித விரதமும் மேற்கொள்ளக்கூடாது அவர்கள் அன்றைய தினம் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் இடவேண்டும் அதே சமயம் சில பெண்கள் பெற்றோர்களை எழுந்திருக்கும் நிலையில் புகுந்த வீட்டில் தங்களுடைய பெற்றோர்களுக்கு இந்நாளில் எதுவுமே செய்ய முடியவில்லை என வருத்தப்படுவார்கள் அவர்கள் இந்நாளில் காகம் அல்லது பசு போன்ற உயிரினங்களுக்கு உணவளித்தாலே பாக்கியம் கிடைக்கும்.
இதையும் படிங்க: புரட்டாசி மாதம்.. இந்த ஒரு மாதம் என்னென்ன செய்யக்கூடாது?
உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்
அப்படியான நிலையில் அமாவாசை நாளில் சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எதை சமைக்கலாம், எதை சமைக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. காரணம் அமாவாசை நாளில் காற்று மற்றும் வெப்பம் ஆகியவை சமநிலையில் இல்லாததால் நம் உடல் சில மாற்றங்களை சந்திக்கும். அதனை சமப்படுத்தும் வகையில் இந்த உணவுகள் உதவும் என நம்பப்படுகிறது.
அப்படியான அமாவாசை நாளில் உணவில் கட்டாயம் வாழைக்காய் இடம்பெற வேண்டும். எப்படி வாழைமரம் வெட்ட வெட்ட வளர்ந்து நமக்கு பலன் தருவது போல் நம் முன்னோர்களின் ஆசியைப் பெறுவதற்கு வாழையடி வாழையாய் நம் குலம் தழைப்பதற்கு வாழைக்காய் இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. மேலும் புடலங்காய், அவரைக்காய், வாழைத்தண்டு, சேனைக்கிழங்கு, பிரண்டை, மாங்காய், இஞ்சி, நெல்லிக்காய், பூசணிக்காய், பாசிப்பருப்பு, கோதுமை, வெல்லம், பாகற்காய், உளுந்து, அகத்திக்கீரை ஆகியவற்றையும் இந்த நாளில் நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஒரு எலுமிச்சை போதும்.. வாழ்க்கையில் இவ்வளவு பிரச்னை தீருமா?
சேர்க்கக்கூடாத காய்கறிகள்
முள்ளங்கி, பிற வகையான கீரைகள், முட்டைக்கோஸ், நூண்கள், உருளைக்கிழங்கு, கேரட், கத்தரிக்காய், காலிபிளவர், பீன்ஸ், பெருங்காயம், பட்டாணி, ப்ராக்கோலி, சுரைக்காய், முருங்கைக்காய், பீட்ரூட், மிளகாய், வெங்காயம், துவரம் பருப்பு மற்றும் அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)