India-Pakistan Ceasefire Violated: சண்டை நிறுத்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு.. எல்லை பாதுகாப்பு படை எஸ்ஐ வீரமரணம்..!
BSF Sub-Inspector Md Imteyaz Martyred: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எஃப் துணை ஆய்வாளர் முகமது இம்தியாஸ் வீரமரணம் அடைந்தார். இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இவரது தியாகத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்படும். பிஎஸ்எஃப் இவரது துணிச்சலைப் பாராட்டியுள்ளது.

ஜம்மு காஷ்மீர், மே 10: சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை (India Pakistan Ceasefire) மீறி ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆய்வாளர் முகமது இம்தியாஸ் (Md Imteyaz) வீரமரணம் அடைந்தார். இவரது வீரமரணத்திற்கு நாளை அதாவது 2025 மே 11ம் தேதி ஜம்முவில் உள்ள எல்லைப்புற தலைமையகத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்படும் என்றும், முகமது இம்தியாஸின் தியாகத்திற்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் என்று பிஎஸ்எஃப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரும் ஜெய் ஹிந்த் என்ற வீர முழக்கத்துடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
பிஎஸ்எப் ட்விட்டர் பக்கத்தில் பதிவு:
இதுகுறித்து பிஎஸ்எப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “2025 மே 10ம் தேதியான இன்று ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ். புரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் நடந்த எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டின் போது நாட்டுக்காக சேவை செய்த துணிச்சலான பிஎஸ்எஃப் சப் இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸின் உச்ச தியாகத்திற்கு வணக்கம் செலுத்துகிறோம். எல்லையில் வீரர்களுக்கு தலைமை தாங்கியபோது துணை ஆய்வாளர் முகமது இம்தியாஸ் முன்னால் இருந்து வழிநடத்தி, தைரியத்தை வெளிப்படுத்தினார்” என்று தெரிவித்தனர்.
எல்லைப்புற தலைமையகத்தில் மலர்வளையம் வைக்கும் விழா:
2025 மே 11ம் தேதியான நாளை ஜம்முவின் பலூராவில் உள்ள எல்லைப்புற தலைமையகத்தில் முழு மரியாதையுடன் மலர்வளையம் வைக்கும் விழா நடைபெறும். அவரது குடும்பத்தினருக்கு பிஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் மற்றும் அனைத்துப் படையினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்கள்.
என்ன நடந்தது..?
We salute the supreme sacrifice made by BSF #Braveheart Sub Inspector Md Imteyaz in service of the nation on 10 May 2025 during cross border firing along the International Boundary in R S Pura area, District Jammu.
While leading a BSF border out post, he gallantly led from the… pic.twitter.com/crXeVFSgUZ
— BSF JAMMU (@bsf_jammu) May 10, 2025
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பிஎஸ்எஃப் வீரர் முகமது இம்தியாஸ் உயிரிழந்தார். மேலும், இதே தாக்குதலின்போது ஏழு பேர் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆர்.எஸ். புரா செக்டாரில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறுகையில், எஸ்ஐ முகமது இம்தியாஸ் முன்னணியில் இருந்து துணிச்சலுடன் தலைமை தாங்கி உச்சபட்ச தியாகத்தை செய்தார். பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூட்டில் இம்தியாஸுடன் ஏழு வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை 5 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் ஜெனரல்கள் முடிவு செய்துள்ளதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். இருப்பினும், இதற்குப் பிறகும், சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, இந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது அதிர்ச்சியை அளித்தது.