Mother’s Day : அம்மாவுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்க 5 வழிகள்!
Heartfelt Care for Mothers : இந்தியாவில், இதய நோய்கள் பெண்களில் முக்கியமான மரண காரணிகளில் ஒன்றாக உள்ளன. இந்தியாவில் பெண்களில் இதய நோயால் ஏற்படும் மரணங்கள் 40% ஆக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அன்னையர் தினத்தில் நமது அம்மாவின் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான 5 வழிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்தியாவில் (India), இதய நோய்கள் (Heart Disease) பெண்களை பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக இருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு ஆய்வில் இந்தியாவில் இதய நோயால் மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமாக இருந்தன . பெண்கள் தங்களின் உடல் நலனைக் கவனிக்காமல் , தனது குடும்பத்துக்காக கடுமையாக உழைப்பதன் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மே 11, 2025 அன்று அன்னையர் தினம் (Mother’s Day) கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து சொல்வதோடு விட்டு விடாமல் அவர்களின் உடல் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம். நமது அம்மாவின் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க சில முக்கியமான வழிகாட்டுதல்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மன அழுத்தத்தை புறக்கணிக்க வேண்டாம்
நீண்டகால மன அழுத்தம், பெண்களில் இதய நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தினசரி நடைப்பயிற்சி, 20 நிமிட மூச்சுப் பயிற்சி, ஸ்மார்ட்போன்களில் செலவிடும் நேரத்தை குறைத்துக்கொள்வது போன்ற எளிய பழக்கங்கள், மன நலனையும் இதய நலனையும் மேம்படுத்தும்.
மருத்துவ பரிசோதனைகளை முன்னுரிமை கொடுக்கவும்
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பரிசோதனை, இரத்த சர்க்கரை மற்றும் தைராய்டு சோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்களின் பாதிப்பு இருந்தால், சிஆர்பி மற்றும் இசிஜி போன்ற கூடுதல் சோதனைகள் அவசியம்.
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை தேர்வு செய்யவும்
சிறு தானியங்கள், கீரைகள், பருப்பு வகைகள், மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் உணவுகள் போன்ற உணவுகளை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சமையலில் எண்ணெய் பயன்பாட்டை குறைத்து, வேக வைத்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நீண்ட நேரம் உட்காருவதை தவிர்க்க வேண்டும்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் தினசரி 30 நிமிடங்கள் நடைபயிற்சி, நடனம், யோகா அல்லது வீட்டு வேலைகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது, இதய நோய்களின் அபாயத்தை 40 சதவிகிதம் வரை குறைக்கும்.
தூக்கத்தை முக்கியமாகக் கருதவும்
தினசரி 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் இதய பாதிப்புகளைத் தடுக்கும். தூங்கும் நேரத்தை முடிவு செய்து, தூங்கும் முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக தூங்கும் இடத்தை அமைதியாக வைத்துக்கொள்வது அவசியம்.
ஒரு குடும்பத்தில் அம்மாவின் உடல் நலனைக் கவனிப்பது, அந்த குடும்பத்தின் நலனுக்கான முதலாவது படியாகும். இதய நோய்கள் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும்போது பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், மீட்டெடுக்கவும் கூடியது. இந்த அன்னையர் தினத்தில் நம் அம்மாவின் இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களின் நலனில் கவனம் செலுத்துவோம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)