B Saroja Devi Passes Away: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சிவாஜி, எம்ஜிஆர்  உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தென்னிந்திய பெண் சூப்பர்ஸ்டார் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்.. அவரது மறைவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

B Saroja Devi Passes Away: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சரோஜா தேவி

Updated On: 

14 Jul 2025 11:00 AM

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி (B Saroja Devi) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி, எம்ஜிஆர்  உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 87 வயதான சரோஜாதேவி அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களார் அன்போடு அழைக்கப்பட்டவர். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக இந்திய சினிமாவில் தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் மறைந்து வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள இல்லத்தில் சரோஜாதேவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரோஜாதேவி பின்னணி

1938 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி பிறந்த அவரின் பெயர் “பெங்களூரு சரோஜா தேவி” என்பதாகும். அதை சுருக்கி பி. சரோஜாதேவி என அழைக்கப்பட்டு வந்தார். கன்னட சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என அறியப்படும் சரோஜாதேவி 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் தனது தொழில் வாழ்க்கையில் வெற்றிப் பெற்ற நடிகைகளில் சரோஜாதேவி மிக முக்கியமானவராக திகழ்கிறார்.

1955 ஆம் ஆண்டு தனது 17வது வயதில் கன்னடத்தில் வெளியான மகாகவி காளிதாசா என்ற படம் மூலம் சினிமாவில் சரோஜாதேவி எண்ட்ரீ கொடுத்தார். இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து 1957 ஆம் ஆண்டு தெலுங்கில் பாண்டுரங்கா மஹாத்யம் என்ற படம் மூலம் அடியெடித்து வைத்தார்.

தமிழ் சினிமாவும் சரோஜாதேவியும்

1957 ஆம் ஆண்டு தமிழில் பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் வெளியான “தங்கமலை ரகசியம்” படம் தான் சரோஜா தேவியின் முதல் அறிமுகமாகும். அப்படத்தில் இடம்பெற்ற நடனம் அதிக கவனத்திற்குள்ளானது. தொடர்ந்து எம்ஜிஆர் தனது நாடோடி மன்னன் படத்தில் ஹீரோயினாக இடம்பெற செய்தார். இந்த படம் அவரை தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக மாற்றியது. அப்படியே பாலிவுட் சினிமாவுக்கும் சரோஜா தேவியை அழைத்துச் சென்றது.

தமிழில் மட்டும் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஆர்.முத்துராமன் என அன்றைய காலக்கட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்தார். குறிப்பாக எம்ஜிஆருக்கு ராசியான கதாநாயகி என்ற சிறப்பை பெற்றார். அவருடன் 26 படங்களில் ஜோடியாக நடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

மறைந்த நடிகை சரோஜாதேவி 1967ஆம் ஆண்டு ஸ்ரீஹர்ஷா என்ற பொறியாளரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு தங்களது மருமகளாக புவனேஸ்வரியை மகளாக தத்தெடுத்துக் கொண்டனர். இந்த பெண்ணுக்கு கௌதம், இந்திரா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். 1986 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் ஸ்ரீஹர்ஷா மறைந்தார். புவனேஸ்வரியும் இளம் வயதிலேயே இறந்ததால் பேரக்குழந்தைகளோடு சரோஜாதேவி வசித்து வந்தார்.

கணவர் மறைவுக்குப் பின் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த சரோஜாதேவி பின்னர் அம்மா, அக்கா போன்ற கேரக்டரில் நடிக்க தொடங்கினார். இன்றைய தலைமுறையினருக்கு சொல்ல வேண்டுமென்றால் விஜய்யுடன் ஒன்ஸ்மோர், விஜயகாந்துடன் பொன்மனச்செல்வன், சூர்யாவுடன் ஆதவன் ஆகிய படங்களில் சரோஜாதேவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.