இது முதல் முறை இல்லை… ஏஐ மூலம் வீடியோவை தவறாக பயன்படுத்தியதாக நடிகை ரம்யா சுப்ரமணியன் கண்டனம்!
Actress Ramya Subramanian: நடிகையும் சுகாதார பயிற்சியாளருமான ரம்யா சுப்பிரமணியன் ஒரு சுகாதார பிராண்ட் தனது வீடியோவை ஏஐ மூலம் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளினி, நடிகை என தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் ரம்யா சுப்ரமணியன் (Ramya Subramanian). இவர் 2007-ம் ஆண்டு இயக்குநர் ராதா மோகன் (Radha Mohan_ இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான மொழி படத்தில் நடிக்கத் தொடங்கினார். இதில் பெரிய கதாப்பாத்திரமாக இல்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் நடிகர் துல்கர் சல்மானின் தோழியாக நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து மாசு என்கின்ற மாசிலாமணி, வனமகன், ஆடை, சங்கத்தலைவன், ரசவாதி என தொடர்ந்து நடித்து வருகிறார். இறுதியாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார். இதில் நடிகை த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தார்.
படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ரம்யா சுப்ரமணியன் நடித்திருந்த நிலையில் அவர்து நடிப்பை ரசிகர்கள் பாராட்டினர். அதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் நலம் குறித்து அவர் வெளியிடும் வீடியோவிற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.
நடிகை ரம்யா சுப்பிரமணியனின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
வி.ஜே. ரம்யா என்றும் அழைக்கப்படும் ரம்யா சுப்பிரமணியன் , தனது வீடியோ ஏஐ உருவாக்கிய குரல்வழி மூலம் ஆன்லைனில் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டுபிடித்த பிறகு, அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏப்ரல் மாதம் 22-ம் தேதி 2025-ம் ஆண்டு செவ்வாய்க்கிழமை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு கடுமையான பதிவில், ஒரு உடல்நலம் மற்றும் நல்வாழ்வு பிராண்ட் தனது வீடியோவை ஒப்புதல் இல்லாமல் தவறாக பயண்படுத்தியதாக ரம்யா குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகை ரம்யா சுப்பிரமணியனின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
”எனது வீடியோவை உருவாக்கிய வாய்ஸ் ஓவர் மூலம் தவறாகப் பயன்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல மூன்றாவது முறையாகும்,” என்று ரம்யா அந்த பதிவில் எழுதியுள்ளார். இந்தச் செயலை “சட்டவிரோதமானது மற்றும் எனது உரிமைகளை அப்பட்டமாக மீறுவது” என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க உள்ளதாக நடிகை ரம்யா தெரிவித்திருந்தார்.
நடிகை ரம்யா தனது எச்சரிக்கை பதிவை வெளியிட்ட பிறகு குறிப்பிட்ட அந்த பிராண்ட் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நடிகை ரம்யாவின் வீடியோவை நீக்கியதாகத் தெரிகிறது. ஏனெனில் அவர்களின் பக்கத்தில் ரம்யாவின் எந்த வீடியோவும் இல்லை என்பது தெரிகிறது.