India Pakistan Conflict: பாகிஸ்தான் பொய்களால் பிறந்த ஒரு நாடு.. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றசாட்டு!
Foreign Secretary Vikram Misri Statement: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் மூலம் 9 பயங்கரவாத மறைவிடங்களை அழித்தது. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானின் பொய்யான பிரச்சாரத்தையும், பயங்கரவாதத்துடனான தொடர்பையும் கண்டித்தார். மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் பாகிஸ்தானின் பங்கு குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அதாவது 2025 மே 7ம் தேதி அதிகாலை இந்தியா இராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் 9 பயங்கரவாத மறைவிடங்களை அழித்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்று பெயரும் வைக்கப்பட்டது. இந்தநிலையில், பாகிஸ்தான் இன்று (2025,மே 7ம் தேதி) மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளையும் இந்தியா முறியடித்தது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு இடையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Foreign Secretary Vikram Misri) பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அப்போது, அவர் பாகிஸ்தான் பொய்களால் பிறந்த ஒரு நாடு என்றும், இவ்வளவு முக்கியமான நேரத்திலும் கூட இது பொய்களையும் பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறது என்று தெரிவித்தார்.
என்ன சொன்னார் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி..?
செய்தியாளர் சந்திப்பின்போது வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசியதாவது, “ஆபரேஷன் சிந்தூர் முதல் பாகிஸ்தான் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பி வருகிறது. பாகிஸ்தானின் மிகப்பெரிய பொய் என்னவென்றால், பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பு இல்லை என்பதுதான். ஆனால், பயங்கரவாதம் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் மண்ணில் செழித்து வருகிறது. இதற்கான சான்றுகள் இந்தியாவிடம் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களிடமும் உள்ளது. உலகம் முழுவதும் பல பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒசாமா பின்லேடன் எங்கே கண்டுப்பிடிக்கப்பட்டார்..? அவருக்கு தியாகி அந்தஸ்து வழங்கியது யார் என்பதை நான் நினைவுபடுத்த தேவையில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், உலகை தவறாக வழிநடத்தி வருகிறது. ஐ.நா.பட்டியலில் உள்ள பல உலகளாவிய பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். அதில் மசூத் அசார், ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகள் பெயர்களும் உள்ளனர். லஷ்கர் – இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் – இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளும் அங்கு செழித்து வளர்கின்றன. சமீப காலங்களில் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் வெளியுறவு அமைச்சரும் ஒப்புக்கொண்டனர்.
மும்பை தாக்குதல்:
மும்பை தாக்குதல் குறித்து பேசிய விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் வரலாறு மற்றும் சாதனை பதிவு அனைவருக்கும் தெரியும். மும்பை தாக்குதலில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் முதல் பலரையும் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தியா எவ்வளவோ கூறியும் பயங்கரவாதிகளின் தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு டி.ஆர்.எஃப் பொறுப்பேற்றுள்ளது. இது பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கரின் ஒரு முன்னணி அமைப்பாகும். இது தொடர்பான தகவல்களை இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கும் வழங்கியது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பஹல்காம் தாக்குதல் குறித்து ஐநா பாதுகாப்பு சபையில் ஒரு அறிக்கை வெளியிடுவது குறித்து இந்தியா பேசியபோது, டி.ஆர்.எஃப் பெயரை சேர்ப்பதை பாகிஸ்தான் எதிர்த்தது. ஆனால், பஹல்காம் தாக்குதலுக்கு டி.ஆர்.எஃப் 2 முறை பொறுப்பேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது” என்றார்.