RBI : ATM சேவை கட்டணங்களை உயர்த்திய ஆர்பிஐ.. இன்று முதல் அமல்!
Reserve Bank of Indian Increased Charges for ATM Usage | ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் ஏடிஎம் மையங்களை பயன்படுத்தி பணம எடுக்கின்றனர். இந்த நிலையில், ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, மே 1 : ஏடிஎம்களில் (ATM – Automated Teller Machine) பணம் எடுப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) சில முக்கிய மாற்றங்களை அறிவித்திருந்த நிலையில், அந்த விதிமுறைகள் இன்று (மே 1, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஏடிஎம்களில் பணம் எடுப்பது (Money Withdrawal) மற்றும் இருப்பை சோதிப்பதற்கான (Balance Check) கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய ஏடிஎம் விதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அன்றாட வாழ்வில் ஏடிஎம் மையங்களை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்
பொதுமக்கள் முன்பெல்லாம் கையில் பணம் வைத்து செலவு செய்து வந்த நிலையில், தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. யுபிஐ பண பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் கையில் பணம் வைத்து செலவு செய்வதில்லை. ஒருவேளை அவர்களுக்கு கையில் பணம் தேவைப்படும் படசத்தில் ஏடிஎம் மையங்கள் மூலம் பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். சென்னை உள்ளிட்ட நகரங்களில் குறைந்தது 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு ஏடிஎம் மையம் உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக அவ்வப்போது ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுத்துக்கொள்கின்றனர்.
என்னதான் ஏடிஎம் இயந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்தாலும், ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நிலையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தில் மாற்றம் செய்து அறிவித்துள்ளது. அதன்படி, இனி வரும் காலங்களில் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கு மற்றும் இருப்பை சோதிப்பதற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும்.
ஏடிஎம் சேவை கட்டணத்தை உயர்த்திய ஆர்பிஐ – எவ்வளவு தெரியுமா?
ஏடிஎம் மூலம் ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த அளவை மீறும் பட்சத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது இந்த கட்டணத்தை தான் ஆர்பிஐ உயர்த்தியுள்ளது. அதன்படி, இலவச பண பரிவர்த்தனைகள் முடிந்து அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைகளுக்கும் ரூ.23 வசூலிக்கப்படும். முன்னதாக இந்த கட்டணம் ரூ.21 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல வேறு வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் மூலம் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் இனி ரூ.23 ஆக வசூலிக்கப்படும். மேலும், வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் முறைகள் அனைத்தும் மே 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.