LPG Cylinder Price: அடுத்த அதிர்ச்சி.. வீட்டு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!
சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை போன்றவை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது பல தரப்பினரிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது

இந்தியா, ஏப்ரல் 7: வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஓராண்டாக எவ்வித மாற்றமும் இல்லாமல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை திடீரென உயர்த்தப்பட்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மகளிர் தினத்தன்று பிரதமர் மோடி வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக அதிரடியாக அறிவித்தார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட சில நிமிடங்களிலேயே சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை ரூ.818.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 8, 2025) முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.868.50 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் மானிய விலையில் சிலிண்டர் பெறுவோருக்கு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும் என்றும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெறுபவர்களுக்கு ரூ.550க்கு சிலிண்டர் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடந்தது என்ன?
இந்தியாவில் எரிபொருள் விலையை சந்தை நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களே மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு மாதமும் முதல் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவை விலை பற்றிய அறிவிப்பு வெளியாகும். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறியது. வரலாறு காணாத அளவுக்கு எரிபொருள் விலை உயர்ந்தது.
இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டு மகளிர் தினத்தன்று ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் கூறிக்கொண்டார். பின்னர் தன் தலைமையிலான அரசு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இந்த விலை குறைப்பின் மூலம் நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதி சுமை கணிசமாக குறையும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
சமையல் எரிவாயுவை மலிவான விலையில் வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதையும் தனது அரசு நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி அந்த அறிவிப்பை வெளியிடும்போது, அந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வெளியான அறிவிப்பின்படி சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 918.50 ஆக இருந்தது. அதேபோல் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை 23.50 காசுகள் உயர்ந்து ரூபாய் 1960. 50 ஆக இருந்தது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 2024ல் நடந்த தேர்தலில் பாஜக அரசு வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியமைத்தது.
கிட்டதட்ட பாஜக ஆட்சி பொறுப்பேற்று 10 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவை விலை உயர தொடங்கியுள்ளது நடுத்தர மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.