Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரூ.75,000 நெருங்கும் தங்கம் விலை.. புதிய உச்சத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்..

Gold Price: தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் 13,2025 ஆன இன்று தங்கம் கிராமுக்கு 195 ரூபாய் உயர்ந்து 9,295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1,560 அதிகரித்து 74 ஆயிரத்து 360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.75,000 நெருங்கும் தங்கம் விலை.. புதிய உச்சத்தால் அதிர்ச்சியில் பொதுமக்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Jun 2025 10:42 AM

தங்கம் விலை, சென்னை 13 ஜூன் 2025: நமது நாட்டில் எந்த ஒரு விசேஷ நாட்களாக இருந்தாலும் அதில் தங்கம் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். அந்த வகையில் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 13, 2025) வரலாறு காணாத அளவு உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று சரிந்து வந்த நிலையில் இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 195 ரூபாய் உயர்ந்து 9,295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1,560 அதிகரித்து 74 ஆயிரத்து 360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடைசியாக ஏப்ரல் 22 2025 அன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 9,290 ரூபாயும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 74 ஆயிரத்து 320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

தங்கத்தின் விலை உயர என்ன காரணம்?

தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் இன்றளவும் திருமணம் என்றால் தங்கத்திற்கு தனி முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 75 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் நடுத்தர மக்கள் மத்தியில் தங்கம் வாங்குவது ஒரு எட்டாக்கனியாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் விலை சுமார் 30 சதவீதம் உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏறுமுகமாகத்தான் உள்ளது. அவ்வப்போது தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

தங்கத்தின் விலை உயர்வதற்கு சர்வதேச அளவில் நடக்கும் ஒரு சில சம்பவங்களே காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மத்திய வங்கிகளில் டாலருக்கு பதிலாக தங்கங்களை வாங்கி வருவதால் இந்த கடுமையான உயர்வை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் ரஷ்யாவின் அமெரிக்க டாலர்கள் முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஷ்யா உலக வங்கியில் தங்கங்களை வாங்க தொடங்கியது. இந்த நிலை மற்ற உலக நாடுகளுக்கும் வந்துவிடும் என்ற அச்சத்தில் சீனா உள்ளிட்ட நாடுகளும் இதனையே பின்பற்றுகின்றனர். இதன் காரணமாக வரும் காலங்களிலும் தங்கத்தின் விலை உயரக்கூடும் எனவும் கருதப்படுகிறது.

புதிய உச்சத்தை அடைந்த தங்கம் விலை:

நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூபாய் 75 உயர்ந்து 9,100 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 72,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் 24 கேரட் தங்கமானது கிராமுக்கு 9,927 ரூபாய்க்கும், சவரனுக்கு 79 ஆயிரத்து 416 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஜூன் 13 2025 ஆன இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது அதாவது ஆபரண தங்கம் கிராமுக்கு 195 ரூபாய் 9,795 ரூபாயாகவும், ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 74 ஆயிரத்து 360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் 24 கேரட் தங்கம் கிராமுக்கு 10 ஆயிரத்து 140 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது, ஒரு சவரன் 81 ஆயிரத்து 120 ரூபாய் யாக விற்பனை செய்யப்படுகிறது.