EB Bill: எளிமையான விஷயம்.. இதை செய்தால் மின் கட்டணத்தை குறைக்கலாம்!
How to Reduce Electricity: அதிகரித்து வரும் மின் பயன்பாடு மற்றும் கட்டணத்தைக் குறைக்க எளிய வழிமுறைகளை நாம் பின்பற்றலாம். பயன்பாட்டில் இல்லாத மின் சாதனங்களை அணைப்பதன் மூலமும் மாதந்தோறும் 5-10 யூனிட் மிச்சப்படுத்தலாம். சில வழிகளைக் கடைபிடித்தால் உங்கள் மின் கட்டணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

மின் கட்டணத்தை குறைக்க வழி
கரண்ட் எனப்படும் மின்சாரத்தை தொட்டால் ஷாக்கடிப்பதை காட்டிலும் சமீப காலமாக மின்சார கட்டணத்தை கண்டால் நாமே நிலைகுலைந்து போய் விடும் அளவுக்கு உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் வீட்டின் மின் தேவை என்பது கணிப்பை விட அதிகமாக உள்ளது. அதேசமயம் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில நேரங்களில் மின் இணைப்பு இல்லாமல் போகும் நிலையில் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இருக்கும் மின் சாதனங்களில் ஏதேனும் ஒன்று இயங்கி கொண்டு தான் இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மின் கட்டணம் என்பது 2 மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்பட்டு வருகிறது. அப்படியான நிலையில் மின்சாரக் கட்டண உயர்வு என்பது பெரும்பாலனவர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இப்படியான நிலையில் நாம் அன்றாடம் மின்னணு பொருட்களை பயன்படுத்தினாலும் சில வழிமுறைகள் மூலம் கட்டணத்தை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
முதலில் பலருக்கும் மின் கட்டணம் எவ்வளவு மதிப்பிடப்பட்டுள்ளது என்பதே தெரியவில்லை. கடந்த மாதத்துடன் உள்ள கணக்குகளை ஒப்பிட்டு பலவிதமான எண்ணங்களை ஏற்படுத்தி கொள்கிறார்கள். அதாவது 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால் 101 – 200 யூனிட் வரை ஒரு கட்டணம், 200 -300 வரை ஒரு கட்டணம் என ஒவ்வொரு 100 யூனிட்களுக்கும் கட்டண முறையானது மாறும். இதனால் குழப்பமடைய வேண்டாம்.
Also Read: இரவெல்லாம் ஏசி ஓடினாலும் EB பில் கம்மியா வரணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
மின் கட்டணத்தை குறைக்க சில வழிகள்
- பெரும்பாலான வீடுகளில் தினமும் கிட்டத்தட்ட 20 மணி நேரம் ஃபேன்களை இல்லாமல் நாம் இயங்குவதில்லை. மரங்கள் வெட்டப்பட்டது, புவி வெப்பமயமாவது, உயரமான கட்டடங்கள் என பல காரணங்கள் இயற்கையாக கிடைக்கூடிய காற்று, வெளிச்சம் நமக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. இதனால் ஃபேன், லைட் பகலில் உபயோகிக்காமல் நம்மால் இருக்க முடியாது. இதில் சீலிங் ஃபேன்களில் உள்ள 80W திறன் மாதத்திற்கு சுமார் 48 யூனிட்கள் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் நவீன BLDC மோட்டார் கொண்ட ஃபேன்கள் இயக்க நேரத்திற்கு 19 யூனிட்களை மட்டுமே பயன்படுத்துகின்றன. மூன்று வழக்கமான மின்விசிறிகளை மட்டும் BLDC மாடல்களால் மாற்றுவதன் மூலம், ஒரு வீடு மாதத்திற்கு சுமார் 87 யூனிட்களைச் சேமிக்க முடியும். ஆரம்பத்தில் BLDC மின்விசிறிகள் அதிக விலை கொண்டவை என்றாலும், அது மிகப்பெரிய பயனுடையதாகும்.
- பல வீடுகளில் இன்னும் சோக்கு பட்டைகளுடன் கூடிய பழைய 40W ட்யூப் லைட்டுகள் செயல்படுகின்றன. அதனை தவிர்த்து விட்டு 18W LED ட்யூப் லைட்டுகளுக்கு மாறுவதால் ஒரு லைட்டில் இருந்து மட்டும் 22W உபயோகத்தை குறைக்கலாம். தினமும் பத்து மணி நேரம் இயங்கும் நான்கு ட்யூப் லைட்டுகளைக் கொண்ட ஒரு வீடு இந்த மாற்றத்தின் மூலம் மாதத்திற்கு சுமார் 26 யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
- அதேசமயம் மின் மோட்டார்கள் அனைவரது வீட்டிலும் இருக்கும். அதனை சரியாக பராமரிக்காமல் விட்டால் மின்சாரம் தேவையில்லாமல் செலவாகும். வழக்கமான எளிய பராமரிப்பு செயல்கள் மூலம் செயல்திறனை மேம்படுத்தலாம். இதில் மாதந்தோறும் 10 யூனிட்களை மிச்சப்படுத்தலாம். கூடுதலாக, கசிவு இல்லாத பிளம்பிங்கை உறுதி செய்வது மோட்டார் இயக்க நேரத்தைக் குறைத்து, மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.
- அழுக்கு கண்டன்சர் சுருள்களைக் கொண்ட ஏர் கண்டிஷனர்கள் தேவைக்கு அதிகமாக ஆற்றலை எடுத்துக்கொள்வதால், மின் பயன்பாடு 15% வரை அதிகரிக்கிறது. ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சுருள்களைச் சுத்தம் செய்வது குளிரூட்டும் திறனைப் பராமரிக்க வேண்டும். குறைந்த வெப்பநிலைக்கு 24°C இல் வைப்பது கூடுதல் சேமிப்பை அளிக்கும், ஏனெனில் இந்த நிலைக்குக் கீழே ஒவ்வொரு டிகிரி குறைப்பும் மின் தேவையை 3-5% அதிகரிக்கிறது.
- இவற்றை தவிர்த்து தொலைக்காட்சிகள், சார்ஜர்கள் மற்றும் செட்-டாப் பாக்ஸ்கள் போன்ற சாதனங்களுக்கான மின்சாரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதத்திற்கு மேலும் 5-10 யூனிட்களை மிச்சப்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. பயன்பாட்டில் இல்லாதபோது பிளக் பாயிண்டில் இவற்றை அகற்றுவது குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது.