Shubhanshu Shukla: வெற்றிகரமாக தரையிறங்கிய ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம்.. வெற்றி நாயகனாக திரும்பிய சுபன்ஷூ சுக்லா..!

Axiom-4 Mission: இந்திய விமானப்படை குழு கேப்டன் சுபன்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். ஆக்ஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக 18 நாட்கள் ISS-ல் தங்கி 60க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டார். ஜூலை 15, 2025 அன்று பசிபிக் பெருங்கடலில் டிராகன் விண்கலத்தில் பாதுகாப்பாக தரையிறங்கினார். பிரதமர் மோடி அவரைப் பாராட்டினார்.

Shubhanshu Shukla: வெற்றிகரமாக தரையிறங்கிய ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம்.. வெற்றி நாயகனாக திரும்பிய சுபன்ஷூ சுக்லா..!

ஆக்ஸியம் மிஷன் 4

Updated On: 

15 Jul 2025 15:49 PM

சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரருமான சுபன்ஷூ சுக்லா (Shubhanshu Shukla), சான் டியாகோ கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் இந்திய நேரப்படி இன்று அதாவது 2025 ஜூலை 15ம் தேதி பிற்பகல் 3.01 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலத்தில் (Dragon Spacecraft) இருந்து தரையிறங்கி, வரலாற்று சிறப்புமிக்க ஆக்ஸியம் 4 பணியை முடித்தார். சுபன்ஷு சுக்லாவுடன், அமெரிக்காவின் பெக்கி விட்சன், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) திட்ட விண்வெளி வீரர் போலந்தின் ஸ்லாவோஸ் “சுவேவ்” உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரிய விண்வெளி வீரர் டிபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்தனர்.

டிராகன் விண்கலம் தரையிறங்கிய காட்சி:

விண்கலம் தரையிறங்கியபோது சுபன்ஷூ சுக்லாவின் பெற்றோர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் திரும்பிவர சுமார் 23 மணிநேரம் ஆனது. நேற்று அதாவது 2025 ஜூலை 14ம் தேதி இந்திய நேரப்படி 4.40 மணியளவில் சுபன்ஷூ சுக்லா தலைமையிலான குழு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு கிளம்பி, தற்போது வந்தடைந்தது. இத குழு 18 நாட்கள் அங்கு தங்கி 60க்கு மேற்பட்ட சோதனைகளை நடத்தியது.

ஆக்ஸியம் மிஷன் 4 (ஆக்ஸ்‑4) இன் டிராகன் விண்கலத்தில், குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா மற்றும் தனது குழுவுடன் கடந்த 2025 ஜூன் 26ம் தேதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புறப்பட்டார்.

முதல் இந்தியர் என்ற பெருமை:

இந்திய விமானப்படை குழு கேப்டனும் இஸ்ரோ விண்வெளி வீரருமான சுபன்ஷு சுக்லா, ராகேஷ் சர்மாவுக்கு பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் என்ற பெருமையையும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

பிரதமர் மோடி பாராட்டு:


சுபன்ஷு சுக்லாவின் வருகை குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், “விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் நானும் இணைகிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் ஒரு பில்லியன் கனவுகளை ஊக்குவித்துள்ளார். இது நமது சொந்த மனித விண்வெளி விமானப் பயணமான ககன்யானை நோக்கி மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது.” என்று தெரிவித்தார்.