”உடனே நிறுத்துங்க” இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்!
India Pakistan Conflict : இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் பதற்றத்தை தணிக்க வேண்டும் எனவும், இருநாடுகளும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்வும் ஜி7 நாடுகள் வலியுறுத்தி உள்ளன. மேலும், பாகிஸ்தான் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு ஜி7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றத்தை குறைக்க வேண்டும் என ஜி7 நாடுகள் வலியுறுத்தி இருக்கின்றன. மேலும், இருநாடுகளும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என ஜி7 நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் சூழல் நிலவுகிறது. இருநாடுகளும் கடந்த 3 நாட்களாக ஒன்றுக்கொன்று வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை உலக நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில், ஜி7 நாடுகள் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து ஜி7 நாடுகள் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றன.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
அதன்படி, கடகனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சார்பாக இந்த கூட்டு அறிக்கை ஜி7 நாடுகள் வெளியிட்டு இருக்கின்றன.
அந்த அறிக்கையில், “கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் G7 வெளியுறவு அமைச்சர்களான நாங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியுடன் சேர்ந்து, ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம்.
மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறோம். இருநாடுகளின் மோதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பில் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்.
கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்
We, the G7 Foreign Ministers of Canada, France, Germany, Italy, Japan, the United Kingdom and the United States of America and the High Representative of the European Union, strongly condemn the egregious terrorist attack in Pahalgam on April 22 and urge maximum restraint from… pic.twitter.com/fN1RkQRS5V
— ANI (@ANI) May 10, 2025
உடனடியாக பதற்றத்தைத் தணிக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். மேலும் அமைதியான முடிவை நோக்கி இரு நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இருநாடுகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் பாகிஸ்தானின் பஹல்காம் தாக்குதலுக்கு ஜி7 நாடுகள் கண்டனம் தெரிவித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட், இருநாடுகளும் பதற்றத்தை குறைப்பதே அதிபர் டிரம்ப்ன் விருப்பம் என கூறியிருந்தார். இந்த இரண்டு நாடுகளும் பல தசாப்தங்களாக ஒருவருக்கொருவர் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன என்பதை அவர் கூறினார். இருப்பினும், அவர் இரு நாடுகளின் தலைவர்களுடனும், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.