WhatsApp : உங்கள் வாட்ஸ்அப் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?
WhatsApp Account Security | வாட்ஸ்அப் கணக்கு மூலம் நடைபெறும் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை சோதனை செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடக செயலி தான் வாட்ஸ்அப் (WhatsApp). ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இந்த மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதில் சிக சிக்கல்களும் உள்ளன. அதாவது வாட்ஸ்அப் செயலி மிக எளிதாக ஹேக் (Hack) செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை சோதனை செய்வது மிகவும் அவசியமாகிறது. எனவே உங்கள் வாட்ஸ்அப் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா? – தெரிந்துக்கொள்வது எப்படி?
- இதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.
- பிறகு வாட்ஸ்அப் செயலியின் முகப்பு பக்கத்தில், வலதுபுறத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் ஒரு சில ஆப்ஷன்கள் தோன்றும். அதில், லிங்கட் டிவைஸ் (Linked Device) என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.
- நீங்கள் அதனை தேர்வு செய்ததும் அதில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு வேறு ஏதேனும் செயலியுடன் இணைந்துள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
- ஒருவேளை உங்களது செயலி இல்லாமல் வேறு ஏதேனும் செயலி அதில் இணைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அதனை நீக்குங்கள்.
- நீங்கள் பயன்படுத்தும் செயலிகளை தவிற மற்ற அனைத்து செயலிகளையும் அதில் இருந்து நீக்குங்கள்.
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி சோதனை செய்யும் பட்சத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பாரேனும் பயன்படுத்தினால் அதனை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் பொதுமக்கள்
வாட்ஸ்அப்பின் வெப் (WhatsApp Web) வசதியை பயன்படுத்தி பலரும் தங்களது தனிப்பட்ட கணினி அல்லது அலுவலக கணினிகளில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஒரே வாட்ஸ்அப் கணக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட செயலிகளில் பயன்படுத்த முடியும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் கவன குறைவு காரணமாக வேறு செயலியில் இருக்கும் கணக்கை லாக் அவுட் (Log Out) செய்ய பலரும் மறந்து விடுகின்றனர்.
இத்தகைய சூழலில் வாட்ஸ்அப் கணக்கில் இருக்கும் தகவல்கள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த முறையை பயன்படுத்தி அவ்வப்போது சோதனை செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.