அடுத்த பாஜக மாநிலத் தலைவர் பதவி.. சரத்குமார் சொன்ன நச் பதில்..
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சரத்குமார், “கட்சித் தலைமை உரிய முடிவெடுத்து, அது அதிகாரப்பூர்வமாக என்னிடம் தெரிவிக்கப்படும் சூழலில், இதுகுறித்து எனது கருத்துகளைத் தெரிவிப்பேன். தற்போது ஊடகங்களில் வெளியாகும் யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது. கட்சித் தலைமை முடிவெடுத்த பிறகுதான் அடுத்தகட்டமாகப் பேச முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 20, 2026: தமிழக பாஜகவில் அடுத்தகட்டமாகப் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மாநிலத் தலைவர் பதவிக்கு நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் நியமிக்கப்படலாம் எனப் பேச்சுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்து தன்னிடம் தெரிவிக்கும் பட்சத்தில், அது குறித்து கருத்துத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
தமிழக பாஜகவில் அண்மைக்காலமாகப் பல்வேறு அரசியல் மாற்றங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய இணையமைச்சராக இருந்த எல். முருகன், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக முழுநேரம் பணியாற்றப் போவதாகக் கூறியிருந்த நிலையில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகித் தனியாக ஓர் இயக்கத்தை வழிநடத்தி வருகிறார். வரும் 2031ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நா.த.க வேட்பாளர் கார்த்திகா கைது: விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி, எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
அடுத்த பாஜக மாநிலத் தலைவர் – லிஸ்டில் இருக்கும் பெயர்கள்
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக பாஜகவால் ஓர் இடத்தைக்கூட வெல்ல முடியாத நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யக் கட்சி மேலிடம் குழு அமைத்தது. இதையடுத்து, கட்சியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அளவில் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும், அடுத்த மாநிலத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. முன்னாள் மாநிலத் தலைவர் வேல்முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற விவாதமும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், சரத்குமார் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் அடுத்த மாநிலத் தலைவர் பதவிக்கான சாத்தியமான தேர்வுகளாகப் பேசப்படுகின்றன.
மேலும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் வேலை… ரூ.23 லட்சத்தை சுருட்டிய விமான நிலைய முன்னாள் அதிகாரி.. போலீசார் எடுத்த நடவடிக்கை!
சரத்குமார் அளித்த பதில் என்ன?
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சரத்குமார், “கட்சித் தலைமை உரிய முடிவெடுத்து, அது அதிகாரப்பூர்வமாக என்னிடம் தெரிவிக்கப்படும் சூழலில், இதுகுறித்து எனது கருத்துகளைத் தெரிவிப்பேன். தற்போது ஊடகங்களில் வெளியாகும் யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது. கட்சித் தலைமை முடிவெடுத்த பிறகுதான் அடுத்தகட்டமாகப் பேச முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசு – இது ஹனிமூன் பீரியட்
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக ஆட்சி குறித்துப் பேசிய அவர், “இது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஹனிமூன் காலம். முதலமைச்சர் விஜய் ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளார். புதிதாகப் பொறுப்பேற்கும் ஒருவர், அரசு நிர்வாகத்தில் என்ன நடக்கிறது, கோப்புகள் எவ்வாறு நகர்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, தற்போதே இதுகுறித்து கருத்துத் தெரிவிப்பது சரியாக இருக்காது. அனைத்தையும் புரிந்துகொண்டு அதன் பிறகு முடிவெடுப்பது நல்லது” எனக் குறிப்பிட்டார். மேலும், இது ஜனநாயக நாடு என்பதால் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் சரத்குமார் தெரிவித்தார்.