குறையும் மழை.. அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

Tamil Nadu Rain Alert: தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் குறைந்து வரும் நிலையில் வரும் 2025, ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 40 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது.

குறையும் மழை.. அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

கோப்பு புகைப்படம்

Published: 

20 Aug 2025 14:38 PM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 20, 2025: தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் அதிக கன மழை பதிவாகி வந்தது. தென்மேற்கு பருவமழை என்பது பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும். ஆனால் 2025 ஆம் ஆண்டு பொரறுத்தவரை தென்மேற்கு பருவ மழை என்பது முன்கூட்டியே அதாவது மே மாதமே தொடங்கப்பட்டது. மே மாதம் தொடங்கியதில் இருந்து ஜூன் மாதம் வரை தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்தது. அதனை தொடர்ந்து ஜூன் முதல் இரண்டு வாரங்களில் மழையின் தீவிரம் என்பது படிப்படியாக குறைந்தது.

பின்னர் 2025 ஜூன் மாதம் இறுதியில் மீண்டும் கோவை, நீலகிரி, தென்காசி, தேனி கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பதிவானது. இந்த சூழலில் 2025 செப்டம்பர் மாதம் வர இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கக்கூடிய நிலையில் தென்மேற்கு பருவ மழை என்பது விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு.. கட்சி கடந்து வந்த பாதை..

முடிவுக்கு வரும் தென்மேற்கு பருவ மழை?

இந்த சூழலில் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஒரு சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது. பிற மாவட்டங்களில் அனைத்துமே வறண்ட வானிலேயே நிலவியது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் 38.2 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ், கரூரில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 34.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

மேலும் படிக்க: தவெக மாநாடு.. பேனர் வைக்க முயன்ற மாணவர்.. மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்:

இந்த சூழலில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 20 ஆகஸ்ட் 2025 தேதியான இன்று ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 26 ஆகஸ்ட் 2025 வரை மிதமான மழை தொடரும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாலை நேரம் அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 35 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.