Tamil Nadu BJP Protest: சட்டவிரோத குடியேற்றம்.. பஹல்காம் தாக்குதல் கண்டித்து பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்!
Pakistan, Bangladesh Immigrants: தமிழ்நாட்டில் பாஜக, 2025 மே 5 ஆம் தேதியான இன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துகிறது. பாகிஸ்தான், வங்கதேச சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றவும், காஷ்மீர் தாக்குதலை கண்டிக்கவும் போராட்டம். இந்திய ராணுவத்தின் மீதான ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை வேண்டியும் கோரிக்கை விடுத்து நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக அரசின் சர்வாதிகார போக்கையும் கண்டனம் செய்கிறது.

சென்னை, மே 5: தமிழ்நாடு முழுவதும் பாஜக (Tamil Nadu BJP) சார்பில் இன்று அதாவது 2025 மே 5ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான் (Pakistan) மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும், இந்திய இராணுவம் மீது ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் வலியுறுத்தப்பட இருக்கிறது. மேலும், காஷ்மீரை அடுத்த பஹல்காமில் கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்தும் பாஜக சார்பில் கவன் ஈர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) அறிக்கை வெளியிட்டு, போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய கருத்துகள்:
- கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதியன்று, காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மக்களை மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் படுகொலை செய்த கொடூரம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.
- சமாதானத்தையும், அமைதியையும் நாடும் நமது இந்திய நாட்டைக் கொலைக்களமாக மாற்றும் நோக்கத்தோடு தீவிரவாத செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தானோடு அரசாங்க ரீதியான உறவுகளை நாம் முற்று முழுதாக முறித்துக் கொண்டு வர வேண்டும்.
- ஜம்மு – காஷ்மீர் பகுதியின் அமைதியைக் கெடுக்க சதி திட்டங்கள் தீட்டும் குழுக்களை உள்நாட்டிற்குள்ளும், எல்லை தாண்டியும் கண்டறிந்து அவர்கள் மீது சமரசமில்லாத முறையில் நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
- இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்து சட்டவிரோத குடியேறிகளே இந்தியாவிற்குள் நடக்கும் பல அசம்பாவிதங்களுக்குக் காரணம் எனவும், ஒரு அசாதாரண சூழ்நிலையில் நம் நாட்டை சேதப்படுத்தும் நோக்கத்துடன் தான் அவர்கள் இங்கு குடியேறியுள்ளார்கள் எனவும் வலுவாக சந்தேகிக்கும் சூழ்நிலையும் தற்போது தலை தூக்கியுள்ளது.
- பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் என வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். ஃபஸ்லூர் ரஹ்மான் இந்தியாவிற்கு எதிராகக் கூறியுள்ள கருத்து நமது சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
- திமுக அரசை விமர்சனம் செய்தால் உடனே கைது, தங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு, பாஜக-வினர் உட்பட எதிர்க்கட்சிகள் மீது காவல்துறையை ஏவி அச்சுறுத்தல் என சர்வாதிகார போக்கைக் கையாளும் திமுக ஆட்சியில்தான் தேச இறையாண்மைக்கு விரோதமாகவும், நமது இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாகவும் பதிவிடுபவர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள். சற்று சிந்தித்துப் பார்த்தால் திமுக அரசே அவர்களை சீராட்டி வளர்ப்பது போல் உள்ளது.
- பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான். வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் 2025 மே 5ம் தேதியன்று ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
சென்னையில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு பாஜக மூத்த நிர்வாகிகள் தலைமை தாங்கும் நிலையில், கோயம்புத்தூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.