கவர்ச்சி அரசியல் நீர்க்குமிழி போன்றது; எப்போது வேண்டுமானாலும் உடைந்து சிதறும்! – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
Edappadi Palaniswami Letter: தற்போதைய தமிழக அரசை விமர்சித்துள்ள அவர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதால் மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 16, 2026: அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், கவர்ச்சி அரசியல் நீர்க்குமிழியைப் போன்றது என்றும், அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து சிதறிவிடும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி மலர தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
55-வது ஆண்டில் அதிமுக – தொண்டர்களுக்கு ஈபிஎஸ் கடிதம்
அதிமுக 54 ஆண்டுகால வரலாற்றை நிறைவு செய்து, 55-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை நிலைநாட்டவும், தமிழக மக்களின் நலனைக் காக்கவும் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களும், ஜெயலலிதா ஆட்சியில் தொட்டில் குழந்தைத் திட்டம், 69 சதவீத இடஒதுக்கீட்டுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பு, அம்மா உணவகம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் சாதனைகள்
தனது தலைமையிலான ஆட்சியில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், 17 புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், குடிமராமத்துப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டங்கள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அதிமுகவில் மீண்டும் புதிய அணி உருவாகிறதா?.. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் ஆலோசனையால் பரபரப்பு!!
கவர்ச்சி அரசியல் குறித்து விமர்சனம்
2026 சட்டமன்றத் தேர்தலில், அசாதாரண அரசியல் சூழலிலும் அதிமுக கூட்டணி சுமார் 1.35 கோடி வாக்குகளைப் பெற்றதாகவும், அதிமுக 47 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கட்சியின் மக்கள் செல்வாக்கு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: “நிர்வாக முடிவுகளை எடுப்பதில் தவெக அரசுக்கு தடுமாற்றம் ஏன்?”.. அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!!
தற்போதைய தமிழக அரசை விமர்சித்துள்ள அவர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதால் மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு அழைப்பு
அதிமுகவைப் பலவீனப்படுத்தவும், சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கவும் ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
“நம் கழகம் அதிகாரத்திற்காக ஒன்றுகூடிய கூட்டமல்ல; அது இலட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம்” என்று குறிப்பிட்ட அவர், புதிய அரசியல் சவால்களையும் ஜனநாயக விரோத சக்திகளையும் ஜனநாயக வழியில் எதிர்கொள்ளத் தொண்டர்கள் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.