AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்”.. ஊழலற்ற நிர்வாகமே எங்கள் இலக்கு.. அண்ணாமலை!!

Local Body Elections: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அண்ணாமலை, உள்ளாட்சி அமைப்புகளைத் தன்னாட்சி அதிகாரமிக்கதாக மாற்றுவதே லட்சியம் என்றார். மேலும், பழனியில் சண்முகநதி தூய்மைப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

“உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்”.. ஊழலற்ற நிர்வாகமே எங்கள் இலக்கு.. அண்ணாமலை!!
அண்ணாமலை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Oct 2026 09:08 AM IST

திண்டுக்கல், அக்.19: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாமல் அவற்றின் தன்னாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பழனியில் நடைபெற்ற சண்முகநதி தூய்மைப்படுத்தும் மற்றும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தில் எப்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் தங்களது அணியினர் முழு வீச்சில் களமிறங்கத் தயாராக இருப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கேரள மாநிலத்தைப் போலத் தமிழகத்திலுள்ள பஞ்சாயத்துகளுக்கும் உரிய அதிகாரமும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்றும், ஊழலற்ற வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகத்தை உருவாக்குவதே தங்களது முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: SIR விவகாரம்: “டெல்லியில் மட்டும் பேசிவிட்டு தமிழகத்தில் பேச தயங்குவது ஏன்?”.. காங்கிரசுக்கு கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி!!

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பறிப்பு:

தற்போதைய சூழலில் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு எந்தவிதமான உண்மையான அதிகாரமும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார். ஒரு காலத்தில் தன்னாட்சி அமைப்புகளாகத் திகழ்ந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் இன்று அதிகாரமின்றிச் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அண்டை மாநிலமான கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார். கேரளாவில் உள்ள நூற்றுக்கணக்கான பஞ்சாயத்து தலைவர்களுக்கும் அரசு வாகனம் வழங்கப்படுவதோடு, ஐ.எஸ்.ஓ. (ISO) தரச்சான்றிதழ் பெற்று ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதையும், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட உள்ளாட்சித் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் அவர் உதாரணமாக எடுத்துக் கூறினார்.

சண்முகநதி புத்துயிர் பெறுதல்:

பழனி பகுதியில் உள்ள சண்முகநதியைப் பாதுகாக்கும் வகையில் தன்னார்வத் தொண்டர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியையும் தூய்மைப் பணிகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். சில வாரங்களுக்கு முன்பு வரை கொசுக்கள் மொய்த்துக் கிடந்த அந்த நதிக்கரைப் பகுதி, தற்போது தன்னார்வலர்களின் உழைப்பால் முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட்டுப் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்பகுதியில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும், வெளிநாடுகளில் உள்ள நீர்நிலைகளைப் போல இந்த இடத்தைச் பொதுமக்கள் ரசிக்கும் வகையில் மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் யாரும் அங்குக் குப்பை கொட்டாமல் இருக்க விழிப்புணர்வுப் பலகைகளை வைப்பதுடன், பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகளை நடத்தி அந்தப் பகுதியை மேலும் அழகூட்ட வேண்டும் என்றும் அவர் அன்போடு கேட்டுக் கொண்டார்.

இதையும் படிக்க : நள்ளிரவில் களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்.. 273 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்!

உள்ளாட்சித் தேர்தலுக்கான எதிர்கால திட்டங்கள்:

கிராமப்புறங்களில் இருந்து மாற்றத்தைத் தொடங்கினால் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலமும் வளர்ச்சி பெறும் என்று குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் நல்லவர்கள், வல்லவர்கள் மற்றும் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர்களைக் கண்டறிந்து வேட்பாளர்களாக நிறுத்தப் போவதாக அறிவித்தார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கத் தெரிந்த தகுதியான நபர்களை உள்ளாட்சித் தேர்தல்களில் களமிறக்கத் தங்களது அமைப்பு தயாராகி வருவதாகத் தெரிவித்தார். கோட்டையில் இருப்பவர்களை நோக்கி கேள்வி கேட்கும் முன்பு, உள்ளாட்சி அளவில் நமது பிரதிநிதிகளிடம் கேள்விகளைக் கேட்கும் முறையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறுனார்.

Follow Us