IPL 2026: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துகொண்ட KKR.. புள்ளிப் பட்டியலில் முதலிடம் யார்?
IPL 2026 Points Table: ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 போட்டிகளில் இருந்து 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், +0.737 என்ற நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளது. இன்னும் 3 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், பிளேஆஃப்களுக்கு ஹைதராபாத் அணி வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) ஒவ்வொரு போட்டிக்கு முடிவிலும் பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான மகத்தான வெற்றியின் மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் செல்வதற்கான தங்களது நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொண்டது. இதன்மூலம், கொல்கத்தா (Kolkata Knight Riders) புள்ளி அட்டவணையில் விறுவிறுப்பான பிளேஆஃப் போட்டிக்கும் வலு சேர்த்துள்ளது. பல அணிகள் பிளேஆஃப் சுற்றில் நீடிக்கின்றன. இந்தநிலையில், எந்த அணி எந்த இடத்தில் உள்ளது? பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது..? என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: டெல்லிக்கு எதிராக பின் ஆலன் சதம்.. தொடர் வெற்றி நடைபோடும் கொல்கத்தா!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 143 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தியபோது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்தில் பின்னடைவுகளைச் சந்தித்தது. ஆனால், ஃபின் ஆலன் மற்றும் கேமரூன் கிரீன் இடையேயான ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப், ஆட்டத்தை முற்றிலும் ஒருதலைப்பட்சமான ஒன்றாக மாற்றியது. ஃபின் ஆலன் தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் சதத்தை அடித்ததன் மூலம், கேகேஆர் அணிக்கு எளிதான வெற்றியைப் பெற்றுத் தந்தார்.




முதல் நான்கு இடங்களை கடும் போட்டி:
ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 போட்டிகளில் இருந்து 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், +0.737 என்ற நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளது. இன்னும் 3 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், பிளேஆஃப்களுக்கு ஹைதராபாத் அணி வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் உள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. மேலும், அதன் நிகர ரன் ரேட் +0.571 ஆக உள்ளது. மேலும் 2 வெற்றிகள், பிளேஆஃப்களுக்கு மிக அருகில் கொண்டு செல்லக்கூடும்.
நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 10 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று, +1.234 என்ற நிகர ரன் ரேட்டை கொண்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தானின் நிகர ரன் ரேட் +0.510 ஆக உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியும் -0.147 என்ற நிகர ரன் ரேட் 12 புள்ளிகளுடன் பெற்றுள்ளது. மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. சென்னை 5 போட்டிகளில் வெற்றி பெற்று 5ல் தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில் அதன் நிகர ரன் ரேட் +0.151 ஆக உள்ளது.
ALSO READ: ஊக்கமருந்து சோதனையை மேற்கொள்ளாத ஜெய்ஸ்வால்.. நோட்டீஸ் அனுப்பிய NADA! விளையாட தடையா?
கடைசி இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 போட்டிகளில் 9 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தைப் பிடித்துள்ளது. கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இதற்கிடையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நிலைமை மோசமடைந்துள்ளது. டெல்லி அணி 11 போட்டிகளில் வெறும் 8 புள்ளிகளுடன் ஒரு இடம் சரிந்து 8வது இடத்திற்கு வந்துள்ளது, மேலும் அதன் நிகர ரன் ரேட் -1.154 ஆகக் குறைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது, அதே சமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 புள்ளிகளை கொண்டிருந்தாலும், மோசமான நிகர ரன் ரேட் காரணமாக கடைசி இடத்தில் நீடிக்கிறது.