Tiruchendur: திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. ராஜகோபுரம் பார்க்க சிறந்த இடம் எது?
Tiruchendur Murugan Temple Kumbabishekam: திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2025 ஜூலை 7 அன்று நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு பிரகாரம் மூலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க, இட வசதிக்கு ஏற்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கடற்கரை ஓரத்தில் மிகப் பிரமாண்டமாக அமைந்துள்ளது திருச்செந்தூர் முருகன் கோயில். தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகன் சூரபத்மன் என்னும் அரக்கனை வதம் செய்த இடமாகவும், சிவனை தரிசிக்க எண்ணி பஞ்சலிங்கங்களை வழிபட்ட இடமாகவும் பல்வேறு போற்றுதலுக்குரியதாக இந்த வழிபாட்டு தலம் திகழ்கிறது. இப்படியான நிலையில் திருச்செந்தூரில் செந்திலாண்டவனாக வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு 2025, ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. அன்று காலை 6.15 மணியில் இருந்து 6.50 மணிக்குள் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு
இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு இதற்காக காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கு பிரகாரத்தில் யாக சாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் நடைபெறும் முக்கிய பகுதி என்பதால் பக்தர்கள் இந்த பிரகாரம் வழியாக செல்வதற்கு அனுமதி கிடையாது. எனவே எக்காரணம் கொண்டும் மேற்கு பிரகாரம் வழியாக வருவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் கோயில் பிரகாரங்கள் மற்றும் வசந்த மண்டபம் அருகில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க இட வசதிக்கு ஏற்ப போதுமான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் கும்பாபிஷேக புனித தீர்த்தமானது ரூம் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலமாக அனைத்து இடங்களிலும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் பல்வேறு இடங்களிலும் எல்இடி திரை மூலம் கும்பாபிஷேக நிகழ்வை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம்.
ராஜகோபுரம் பார்க்க சிறந்த இடம்
கோவிலின் ராஜகோபுரம் கடற்கரைப் பகுதியில் இருந்து தெளிவாக காண முடியும். அது மட்டுமல்லாமல் கீழ்க்கண்ட இடங்களில் இருந்தும் நம்மால் ராஜ கோபுரத்தில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வை பார்த்து மகிழ முடியும். அந்த வகையில் தூத்துக்குடி ரோட்டில் அமைந்துள்ள ஜே.ஜே.நகர் பார்க்கிங், ஜே.ஜே.நகர் பார்க்கிங் செல்லும் வழியில் உள்ள பைரவர் கோயில், அதே வழியில் தாய் ரிசார்ட் பின்புறம், நாழிக்கிணறு பழைய பேருந்து நிலையம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி, திருச்செந்தூர் கோயிலில் டி பிளாக் மற்றும் II பிளாக் முன்புறம், சண்முகர் விடுதி ஆகிய இடங்களில் இருந்து ராஜகோபுரத்தை காணலாம்.