Agni Natchathiram: அக்னி நட்சத்திரம்.. நாம் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
2025ம் ஆண்டு மே 4 முதல் 28 வரை நீடிக்கும் அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகள் குறித்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மரம் வெட்டுதல், கிணறு அமைத்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபகாரியங்களைச் செய்யலாம்.

ஜோதிட ரீதியாக (Astrology) பார்க்கும்போது கால வாரியாக நாம் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது இருக்கும். அதனையெல்லாம் பின்பற்றி நடக்கும்போது தேவையில்லாத பிரச்னைகளை நாம் தடுக்கலாம். அந்த வகையில் கடுமையான வெயில் காலமாக அறியப்படும் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் (Agni Natchathiram) நாம் சில விஷயங்களை செய்யலாம், செய்யக்கூடாது என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரமானது மே 4 ஆம் தேதி தொடங்குகிறது. இது 2025, மே 28 ஆம் தேதி நிறைவடைகிறது. கிட்டதட்ட 25 நாட்கள் அதிக வெப்பம் வெளியாகும் நிலையில் இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது பற்றிப் பார்க்கலாம்.
சூரியனை அடிப்படையாக வைத்து நமது பஞ்சாங்க முறைகள் அனைத்தும் கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சூரிய பகவானின் அதி தேவதையாக அறியப்படும் அக்னி பகவான் தன்னுடைய முழு வெப்ப கதிரையும் வெளியிடும் காலம்தான் அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை பயணிப்பார். வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என உடல் நல ரீதியாக அறிவுரைகள் வழங்கப்படும். அதேசமயம் ஜோதிடத்தை பொருத்தவரை அக்னி நட்சத்திரம் தோஷம் என அழைக்கப்படுகிறது.
என்ன செய்யக்கூடாது?
அக்னி நட்சத்திர காலகட்டத்தில் நாம் எந்த மரம் உள்ளிட்ட தாவரத்தையும் வெட்டக்கூடாது. காரணம் நிழல் தரும் மரங்கள் ஆன்மீக ரீதியாகவும் தொடர்புடையவை என்பதால் இதனை மேற்கொள்ளக்கூடாது. அதேபோல் கிணறு, குளம், தோட்டங்கள் ஆகியவை அமைக்க கூடாது. எந்தவித பராமரிப்பையும் மேற்கொள்ளக்கூடாது. பகல் நேரங்களில் வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது. வீடு தொடர்பான காரியங்கள் எதையும் நாம் மேற்கொள்ளவே கூடாது. அதாவது பழைய வீடு பராமரித்தல், சொந்த வீடு கட்ட தொடங்குதல், சொந்த வீடு கட்டி குடியேறுதல், வாசற்கால் வைத்தல், கூரை அல்லது ஓடு வேய்த்தல், குழந்தைகளுக்கு காதுகுத்தி முடி காணிக்கை செலுத்துதல், கடன் கொடுப்பது, தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
இதெல்லாம் தாராளமாக செய்யலாம்!
அதேசமயம் சில விஷயங்கள் நாம் செய்யலாம் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு,பெண் பார்த்தல், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட சுப காரியங்கள் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் நல்ல நேரம் பார்த்து தாராளமாக செய்யலாம். அதேசமயம் தண்ணீர் பந்தல் அமைக்கலாம். தோஷ நிவர்த்தி பூஜைகள், நவகிரக வழிபாடுகள் மேற்கொள்ளலாம். திருமண மண்டபம், கடைகள் ஆகிய வணிக சம்பந்தப்பாட்ட கட்டுமான பணிகளை ஆரம்பிக்கலாம். தங்களால் முடிந்த தானங்களை செய்யலாம்.
ஒருவேளை வெளியில் தண்ணீர் பந்தல் அமைக்க முடியாவிட்டாலும் நம் வீட்டு மாடியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கலாம். இது ஜீவராசிகள் தாகம் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக அமையும். இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு புண்ணியமாகவும் அமையும். அதேபோல் ஒரு மரமாவது இந்த நேரத்தில் நடுவது மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் நாம் செய்யும் குறிப்பிட்ட சில காரியங்கள் வெற்றிகரமாக அமையாது என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனால் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் நன்கு ஆராய்ந்து செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)