மகா சிவராத்திரி 2026.. இந்த 5 விஷயத்தை மட்டும் செய்தால் முழு பலனும் பெறலாம்.. | TV9 Tamil News

மகா சிவராத்திரி 2026.. இந்த 5 விஷயத்தை மட்டும் செய்தால் முழு பலனும் பெறலாம்..

Published: 

11 Feb 2026 14:01 PM

 IST

Maha Shivaratri 2026: மகா சிவராத்திரி என்பது சாதாரண ஒரு விரத நாளல்ல. அது மனதை சுத்தப்படுத்தும், ஆத்மாவை உயர்த்தும், பக்தியை ஆழப்படுத்தும் ஒரு புனித இரவு. அந்த நாளில் நாம் முறையாக விரதம் இருந்து, மனதார சிவனை நினைத்து வழிபட்டால், அதற்கான முழு பலனும் நிச்சயம் கிடைக்கும் என்று ஆகமங்களும் புராணங்களும் கூறுகின்றன.

1 / 5மகா  சிவராத்திரி நாளில் அதிகாலை நேரமே எழுந்து, குளித்து சுத்தமான உடை அணிந்து, பூஜை அறையில் விளக்கேற்றி மனதை அமைதியாக்க வேண்டும். அதன் பின் “ஓம் நமசிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை மனசார ஜபித்து விரதத்தை தொடங்க வேண்டும். இந்த ஜபம் எண்ணிக்கைக்காக அல்ல; மனம் முழுவதும் சிவ சிந்தனையால் நிரம்ப வேண்டும் என்பதற்காக. மனம் அமைதியாகி, பக்தி உணர்வு பெருகும் போது தான் விரதத்தின் உண்மையான தொடக்கம் நிகழ்கிறது.

மகா சிவராத்திரி நாளில் அதிகாலை நேரமே எழுந்து, குளித்து சுத்தமான உடை அணிந்து, பூஜை அறையில் விளக்கேற்றி மனதை அமைதியாக்க வேண்டும். அதன் பின் “ஓம் நமசிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை மனசார ஜபித்து விரதத்தை தொடங்க வேண்டும். இந்த ஜபம் எண்ணிக்கைக்காக அல்ல; மனம் முழுவதும் சிவ சிந்தனையால் நிரம்ப வேண்டும் என்பதற்காக. மனம் அமைதியாகி, பக்தி உணர்வு பெருகும் போது தான் விரதத்தின் உண்மையான தொடக்கம் நிகழ்கிறது.

2 / 5

பலர் விரதம் என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று நினைத்து பயப்படுவார்கள். ஆனால் விரதத்தின் நோக்கம் உடலை வதைக்க அல்ல; மனதை சுத்தப்படுத்துவதே. உடல் நலம் சரியாக இருந்தால் பால், பழம் அல்லது தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றோர் உடல்நிலையை கருத்தில் கொண்டு லேசான உணவு எடுத்துக்கொள்ளலாம். விரதம் என்பது வாயை கட்டுவது மட்டுமல்ல; பேச்சையும் கட்டுப்படுத்துவது. அந்த நாள் முழுவதும் மற்றவர்களைப் பற்றி குறை கூறாமல், கோபப்படாமல், சாந்தமாக இருக்க வேண்டும். முடிந்தவரை மௌனமாக இருந்து மனதில் “சிவா சிவா” என்று ஜபிக்க வேண்டும். இதுவே உண்மையான விரதம்.

3 / 5

சிவனுக்கு மிகவும் பிடித்த பூஜை பொருள் விள்வ இலை. தங்கம், வைரம் போன்ற ஆடம்பரங்களை விட அன்புடன் சமர்ப்பிக்கும் ஒரு கைப்படி விள்வ இலை அதிகம் மகிழ்விக்கிறது. மாலை நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பு. செல்ல முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே சிவலிங்கத்திற்கு அல்லது சிவபடத்திற்கு பால், தேன் அல்லது சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்யலாம். சிவபெருமான் “அபிஷேக பிரியர்” என்று அழைக்கப்படுகிறார். பக்தியுடன் ஊற்றப்படும் ஒரு சொட்டு தண்ணீரையே அவர் ஏற்றுக் கொள்கிறார்.

4 / 5

சிவராத்திரி இரவு மிகவும் முக்கியமானது. அந்த இரவில் கோயில்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும். அவற்றில் ஏதாவது ஒரு பூஜையில் நேரில் கலந்துகொள்வது சிறப்பு. வீட்டில் இருந்தாலும் விழித்திருந்து சிவபுராணம் படிக்கலாம், தேவாரம் கேட்கலாம், குடும்பத்துடன் சிவநாம சங்கீர்த்தனம் செய்யலாம். தொலைக்காட்சி, கைபேசி போன்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்குவது விரதத்தின் நோக்கத்தை பாதிக்கும்.

5 / 5

விரத முடிவு – கருணையால் நிறைவு: மறுநாள் காலையில் குளித்து மீண்டும் சிவனை வணங்கி, சாப்பிடும் முன் பசியுடன் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கோ, வாயில்லா ஜீவன்களுக்கோ உணவு அளிப்பது மிகப் பெரிய புண்ணியம். குறிப்பாக பசுமாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் அளிப்பது சிறப்பு. சிவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது கருணை, அன்பு, தியாகம். அவற்றை மனதில் கொண்டு விரதத்தை நிறைவு செய்தால் அதன் முழு பலனும் நிச்சயம் கிடைக்கும்.