மைசூர் சாண்டல் விளம்பரத்துக்கு இந்தி நடிகை தமன்னாவா? கிளம்பியது புது சர்ச்சை.. போர்க்கொடி தூக்கும் கர்நாடகா மக்கள்!
Tamannaah as Mysore Sandal Soap Brand Ambassador: கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப்பிற்கு பாலிவுட் நடிகை தமன்னா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ரூ.6.20 கோடி ஒப்பந்தத்தில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னட நடிகைகள் தேர்வு செய்யப்படாததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கர்நாடக அரசின் நிறுவனமான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் தயாரிக்கும் மைசூர் சாண்டல் சோப்பிற்கு நடிகை தமன்னா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 2 ஆண்டு ஒப்பந்தத்தில் ரூ.6.20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு பல கன்னட அமைப்புகள் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாலிவுட் நடிகையை தேர்வு செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் பாட்டீல், “தேசிய அளவில் பிரபல முகம் தேவைப்பட்டதால் தமன்னாவை தேர்ந்தெடுத்தோம்” என்றார். முன்னதாக ராஷ்மிகா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் தொடர்பு கொள்ளப்பட்டும், அவர்களால் முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மைசூர் சாண்டல் சோப்பிற்கு தமன்னா தூதரானதுக்கு எதிர்ப்பு
கர்நாடக அரசு நிர்வகிக்கும் “கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட்” நிறுவனம் தயாரிக்கும் புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பிற்கு பிரபல நடிகை தமன்னா பட்டையை விளம்பர தூதராக நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 100 சதவீத சந்தன எண்ணெய் அடங்கியதென விளம்பரப்படுத்தப்படும் இந்த சோப்பு, 1916 ஆம் ஆண்டு முதல் மக்களிடையே விற்பனைக்கு வருகிறது. தினமும் சுமார் 10–12 லட்சம் சோப்புகள் தயாரிக்கப்படும் நிலையில், விற்பனை மேலும் அதிகரிக்க, அரசு இரண்டு ஆண்டுகள் கால ஒப்பந்தத்தின் கீழ் தமன்னாவை நியமித்து ரூ.6.20 கோடி வழங்கியுள்ளது.
சமூக வலைதள பயனாளர்கள் கடும் எதிர்ப்பு
இந்நிலையில், தமன்னா பாலிவுட் நடிகை என்பதாலும், அவருக்கு பதிலாக கன்னட நடிகையரை நியமிக்கக் கூடாது என கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல கன்னட அமைப்புகள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா அமைச்சரின் விளக்கம்
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், “மைசூர் சாண்டல் சோப்பின் வருவாயை 2028-ம் ஆண்டுக்குள் ரூ.5,000 கோடியாக உயர்த்தவேண்டும் என்ற இலக்குடன், இந்திய அளவில் பிரபலமுடைய ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக தமன்னாவைத் தேர்ந்தெடுத்தோம்” எனத் தெரிவித்தார்.
முன்னணி நடிகைகளை தொடர்பு கொண்டும் பலனில்லை என விளக்கம்
மேலும், தமன்னாவுக்கு முன்னதாக நடிகைகள் தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், சிலர் ஏற்கனவே பிற விளம்பர ஒப்பந்தங்களில் இருந்ததாலும், சமூக வலைதளங்களில் 2.8 கோடி பின்தொடர்பாளர்கள் உள்ள தமன்னாவைத் தேர்வு செய்யும் முடிவை மார்க்கெட்டிங் நிபுணர்களின் ஆலோசனையுடன் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். இந்த நியமனம் குறித்து கர்நாடக அரசு விளக்கம் அளித்தும், மாநிலத்தில் கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன.