உளவுத்துறை எச்சரிக்கை.. வெளிநாடு பயணங்களை ரத்து செய்த பிரதமர் மோடி.. பின்னணி என்ன?
Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நோர்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், முக்கிய நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

டெல்லி, மே 7 : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நோர்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
ஆப்ரேஷன் சிந்தூர்
அதோடு, இந்த கொடூர தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் பயங்கரவாதிகளுக்கு கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி பேசி இருந்தார். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 2025 மே 7ஆம் தேதியான இன்று நள்ளிரவு இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் என பெயிரிடப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் கிட்டதட்ட 25 நிமிடங்கள் நடந்ததாக ராணுவத்தினர் கூறியுள்ளனர். இன்று இரவு 1:05 முதல் 1:30 வரை இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதில் கிட்டதட்ட 9 இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காஷ்மீரில் உள்ள முசாபராபாத், கோட்லி, குல்பூர், பிம்பர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட், சக் அமரு, முரிட்கே, பஹவல்பூர் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தலைமையகம், பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது முகாம் உள்ளிட்ட 9 பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
வெளிநாடு பயணங்களை ரத்து செய்த பிரதமர் மோடி
PM Narendra Modi’s visit to Norway, Croatia and the Netherlands postponed: Sources pic.twitter.com/j8TsHkBbuD
— ANI (@ANI) May 7, 2025
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். இதன் முலம், ராணுவம் அல்லது பயங்கரவாத குழுக்கள் மூலம் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த தாக்குதல் நடக்கும். இதனால், காஷ்மீர் எல்லை வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்த காரணமாக, பிரதமர் மோடி தனது வெளிநாடு பயணங்களை ரத்து செய்துள்ளார். குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த பயணங்களை ரத்து செய்திருக்கிறார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து, வெளிநாடு பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. அதோடு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.