“இந்தியாவின் அணுசக்தி பயணத்தில் வரலாற்று மைல்கல்”.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி பாராட்டு!
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழ்நாடு மற்றும் மேகாலயா மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளைப் பிரதமர் விரிவாகப் பாராட்டினார். இந்த 5 ஆண்டு காலத் திட்டம், அழியும் நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை மீட்பதை நோக்கமாகக் கொண்டது. இது வெறும் அரசாங்கத் திட்டம் மட்டுமல்ல, அந்தந்தப் பகுதி மக்களின் பங்களிப்போடு நடக்கும் ஒரு புரட்சி என்று அவர் வர்ணித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 133வது ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) வானொலி உரையின் மூலம் தேச மக்களிடையே உரையாற்றினார். தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும், நாட்டின் அறிவியல் சாதனைகள் மற்றும் சர்வதேச அமைதியின் அவசியம் குறித்து அவர் விரிவாகப் பேசினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்தி முதல் கலாச்சாரம், தொழில்நுட்பம் மற்றும் மக்கள் பங்களிப்பு வரை பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் சாதனைகளைப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார். குறிப்பாக நாட்டின் விரிவடைந்து வரும் காற்றாலை மின் உற்பத்தித் திறன் குறித்து அவர் சிறப்பு கவனம் செலுத்தினார். தமது உரையின் மையப்பொருளாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை முன்வைத்த பிரதமர், காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தை ஒரு “மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி” என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை – அமெரிக்க துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடி கருத்து
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் வரலாற்று மைல்கல்:
இந்த உரையின் தொடக்கத்தில், இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளின் சாதனையைப் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள ‘பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்’ (PFBR) தற்போது செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். “இது இந்தியாவின் அணுசக்தி பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல். மிக முக்கியமாக, இந்த அணு உலை முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம்” என்று அவர் குறிப்பிட்டார். இது ‘தற்சார்பு இந்தியா’ கொள்கைக்கு ஒரு சிறந்த சான்று. ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இத்தகைய உயர் ரகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மிகக் குறைந்த கழிவுகளுடன் அதிக மின்சாரம் தயாரிக்க முடியும் என அவர் விளக்கினார்.
விண்வெளி மற்றும் அறிவியல் வளர்ச்சி:
அறிவியலை நாட்டின் வளர்ச்சியுடன் இணைத்துப் பார்ப்பதே இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை என்று பிரதமர் தெரிவித்தார். நமது விஞ்ஞானிகளின் விடாமுயற்சியால் விண்வெளித் திட்டங்கள் தேசக் கட்டமைப்பில் முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் புகழாரம் சூட்டினார். உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் வேளையில் (அமெரிக்கா – ஈரான் போர் போன்ற சூழல்களைக் குறிப்பிட்டு), புத்தரின் போதனைகள் தற்போதைய காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மிகவும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். சர்வதேச அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் புத்தரின் வழியைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
‘புதிய வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை’:
இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்துப் பிரதமர் பேசினார். வேலைவாய்ப்புகளைப் பதிவு செய்யும் முறையை எளிதாக்குவது மற்றும் முதல்முறை பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும். உற்பத்தித் துறையில் அதிக அளவில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலம் இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பல்லுயிர் மேலாண்மை மற்றும் சமூகப் பங்களிப்பு:
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழ்நாடு மற்றும் மேகாலயா மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளைப் பிரதமர் விரிவாகப் பாராட்டினார். இந்த 5 ஆண்டு காலத் திட்டம், அழியும் நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை மீட்பதை நோக்கமாகக் கொண்டது. இது வெறும் அரசாங்கத் திட்டம் மட்டுமல்ல, அந்தந்தப் பகுதி மக்களின் பங்களிப்போடு நடக்கும் ஒரு புரட்சி என்று அவர் வர்ணித்தார்.
இதையும் படிக்க: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு.. விமானத்தின் எஞ்சினில் தீ.. 6 பயணிகள் காயம்
கடும் கோடை: பொதுமக்களுக்கான அறிவுரைகள்:
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், ஆரோக்கியம் குறித்துப் பிரதமர் சில ஆலோசனைகளை வழங்கினார். நீர்ப்பற்றாக்குறை மேலாண்மை: மழைநீர் சேகரிப்பு மற்றும் பாரம்பரிய நீர் நிலைகளைத் தூர்வாருவது குறித்துப் பேசினார். மேலும், பிரதமர் மோடி புத்த பூர்ணிமா தினத்திற்கான தனது வாழ்த்துகளையும் முன்கூட்டியே தெரிவித்தார். கௌதம புத்தரின் போதனைகளை நினைவு கூர்ந்த அவர், அமைதி என்பது நமக்குள் இருந்து தொடங்குகிறது என்றும், சுயக் கட்டுப்பாடு தான் மிகப்பெரிய வெற்றி என்றும் கூறினார். மோதல்களையும் பதற்றங்களையும் சந்தித்து வரும் இன்றைய உலகிற்கு இந்தக் கருத்துக்கள் மிகவும் பொருத்தமானவை என்றும் அவர் தெரிவித்தார்.