Diabetic Shock : டையபடிக் ஷாக் பற்றி தெரியுமா? அதன் அறிகுறிகள் என்ன ?

Diabetic Shock : மிகக் குறைந்த அல்லது அதிக இரத்த சர்க்கரை அளவால் டைபட்டிக் ஷாக் ஏற்படக் கூடும். இது உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அவசர நிலையாகும். இது சரியாகக் கவனிக்கப்படாவிட்டால், ஆழ்ந்த கோமா நிலைக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது. இதன் அறிகுறிகள் என்ன உடனடி தீர்வு என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Diabetic Shock : டையபடிக் ஷாக் பற்றி தெரியுமா?  அதன் அறிகுறிகள் என்ன ?

மாதிரி புகைப்படம்

Published: 

25 May 2025 22:43 PM

சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ளும் அபாயகரமான நிலைகளில் ஒன்றாக டையபடிக் ஷாக் (Diabetic Shock) கருதப்படுகிறது. இதுவே ஹைப்போகிளைசெமியா எனப்படும், ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறையும்போது ஏற்படும் அவசர நிலை. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இது நோயாளி உயிர் இழக்கும் அபாயத்திற்கு கொண்டு செல்லும்.  சாதாரணமாக ரத்த சர்க்கரை அளவு 80 முதல் 130 மில்லிகிராம்/டெசிலிட்டர் (mg/dL) ஆக இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவு மிகவும் குறைவாகி விட்டால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததால் உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகும்.இது பெரும்பாலும் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்போது, அதிக உடற்பயிற்சி, வாந்தி போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இது பொதுவாக டைப் 1 டயப்படிஸ் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

முக்கிய அறிகுறிகள்:

  • அதிக வியர்வை

  • மன அழுத்தம் அல்லது பதட்டம்

  • தோல் நிறம் குறைதல்

  • வாந்தி

  • வேகமான இதய துடிப்பு

  • நடுக்கம்

  • மயக்கம், தலைசுற்றல்

உடனடி தீர்வு என்ன?

அமெரிக்கன் டயப்பிட்ஸ் அசோசியேஷன் (American Diabetes Association (ADA) கூறும் 15-15 விதியின் அடிப்படையில்,

  1. முதலில் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.

  2. அது 70 mg/dL க்கும் குறைவாக இருந்தால், 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ள இனிப்பு உணவு அல்லது இனிப்பு பானம் உட்கொள்ள வேண்டும்.

  3. 15 நிமிடங்களில் மீண்டும் பரிசோதிக்க வேண்டும்.

  4. அதன் பிறகும் குறைவாக இருந்தால், மறுபடியும் அதே அளவு கார்போஹைட்ரேட் உட்கொள்ள வேண்டும்.

இவற்றை செய்து சர்க்கரை அளவு இயல்பாக வந்த பிறகு வழக்கமான உணவு சாப்பிடலாம்.  ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு பிறகு சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு வரவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. அத்துடன், சிலருக்கு குளுகககான் (Glucagon) எனும் ஹார்மோன் மருந்து அவசர நேரங்களில் பரிந்துரைக்கப்படும். இது சிறிது நேரத்தில் ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவும்.

டையபடிக் ஷாக் என்பது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மோசமான நிலையாகும். இதன் அறிகுறிகளை அவதானித்து உடனே நடவடிக்கை எடுப்பதனாலேயே உயிரிழப்பை தவிர்க்க முடியும். சர்க்கரை நோயாளிகள் தினமும் ரத்த சர்க்கரை அளவை சரிபார்த்து, உணவுக்கு இடைவெளி விடாமல் இருப்பது, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வது அவசியம். அதே போல உடல் பயிற்சி அளவை கட்டுப்படுத்துவது அவசியம். உடனடி நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வால் டயபடிக் ஷாக்கை தடுக்க முடியும். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு அவசியம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)