காதல் படங்களை இயக்காததற்கு இதுதான் காரணம் – இயக்குநர் வெற்றிமாறன்
Director Vetrimaaran: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் கேங்ஸ்டர்களை அடிதடி ஆக்ஷன் என்று வெளியானாலும் அதில் ஒரு சில காதல் காட்சிகளும் இருக்கும். அந்த காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறவும் இதுவரை தவறியதில்லை. அப்படி இருக்கையில் அவர் காதல் படம் ஏன் எடுக்கவில்லை என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaaran). குறைந்த அளவிளான படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் பான் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார் வெற்றிமாறன். தனது படங்களில் அதிக அளவில் வன்முறை காட்சிகளை பயன்படுத்தும் இயக்குநர் வெற்றி மாறன் ஏன் முழு நீள காதல் படங்களை இயக்குவது இல்லை என்பது குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தொடர்ந்து ஆக்ஷன் படங்களாகவே எடுக்குறீங்களே எப்போது காதல் படங்கள் எடுப்பீங்க என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு காதல் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது வேறு மாதிரியாக உள்ளது. அதனால் தான் காதல் படங்கள் எடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன வெற்றிமாறன் தற்போது வரை 7 படங்கள் மற்றும் ஒரு ஆந்தாலஜி படம் என்று 8 இதுவரை தமிழ் சினிமாவில் இயக்கி உள்ளார். இதில் 4 படங்கள் நடிகர் தனுஷ் உடனே கூட்டணி வைத்தார் இயக்குநர் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் தனுஷின் வெற்றிக் கூட்டணி:
இயக்குநர் வெற்றிமாறன் தான் இயக்கிய முதல் படத்தில் நடிகர் தனுஷ் நடித்ததாலோ என்னவோ தெரியவில்லை தொடர்ந்து அவருடன் மட்டுமே நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். இவர்களது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.
பெரும்பாலும் இயக்குநர் வெற்றிமாறன் தான் எழுதும் கதைகள் அனைத்தையும் நடிகர் தனுஷை வைத்து எழுதுவதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அப்படி இவர்கள் இருவருக்கும் இடையே மிகவும் பலமான நட்பு உள்ளது என்றே சொல்லலாம்.
சூர்யாவுடன் வாடிவாசலுக்காக கூட்டணி வைத்த வெற்றிமாறன்:
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியானது. நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் கூட்டணி வைத்துள்ளார் வெற்றிமாறன்.
வாடிவாசல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. தொடர்ந்து நாவல்களை அடிப்படையாக கொண்டு படங்களை இயக்கும் வெற்றிமாறன் தற்போது வாடிவாசல் என்ற குறுநாவலை படமாக எடுக்க உள்ளார்.
இந்த நாவலை சி.சு.செல்லப்பா என்ற ஆசிரியர் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு புகைப்படங்களுடன் அறிவித்தார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களில் தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.