சுவருக்குள் நடுவில் விழுந்த மாப் ஸ்டிக்.. எடுக்க சென்று சிக்கிக்கொண்ட மூதாட்டி மீட்பு!
Woman trapped between Walls: சென்னையை அடுத்த மணலியில் வசிக்கும் 60 வயதான பொம்மி, வீட்டை சுத்தம் செய்த பின்பு, மாப் ஸ்டிக்கை மொட்டை மாடியில் காய வைத்தார். அது பக்கத்து வீட்டு சுவருக்கும் இடையே விழுந்ததால், எடுக்கச் சென்ற பொம்மி அரை அடி இடைவெளியில் சிக்கினார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டார். சிராய்ப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, மே 19: சென்னையை அடுத்த மணலியில் (Manali) உள்ள காமராஜர் தெருவில் வசிப்பவர் 60 வயதான பொம்மி. இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, தனது உறவினர்களுடன் வாழ்ந்து வருகிறார். பொம்மியின் குடும்பத்தை சார்ந்த அனைவரும் திருப்பதி (Tirupati) சென்ற நிலையில், பொம்மி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தநிலையில், வீட்டை முழுமையாக பொம்மி துடைத்து, தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்துள்ளார். தொடர்ந்து, மாப்பை (Mop stick) பயன்படுத்தி வீட்டில் இருந்த தண்ணீரை நன்றாக துடைத்துள்ளார். இதன்பிறகுதான், பொம்மிக்கு எதிர்பாராத ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் நடந்தது.
என்ன நடந்தது..?
வீட்டை நன்றாக சுத்தம் செய்த பிறகு வீடு துடைக்கும் மாப் ஸ்டிக் பயங்கர ஈரமாக இருந்துள்ளது. இதையடுத்து, இது நன்றாக காய வேண்டும் என்பதற்காக பொம்மி, மாப் கீழ் இருக்கும் துடைப்பானை புழிந்து மொட்டை மாடியில் காய வைத்து, கீழே வந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியில் காய வைத்த மாப் ஸ்டிக்கானது பக்கத்து வீட்டுக்கும், இவரது வீட்டுக்கு இடையில் உள்ள இடத்தில் விழுந்துள்ளது. இந்த இரண்டு சுவர்களுக்குள்ளான இடைவெளி வெறும் அரை அடியே என்றே கூறப்படுகிறது. என்னடா! இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணிய பொம்மி, மாப் ஸ்டிக்கை எடுப்பதற்காக இரு வீட்டுக்கு இடையில் உள்ள அரை அடி இடைவெளிக்குள் சென்றுள்ளார்.
இரு சுவர்களும் மிக நெருக்கமாக இருந்துள்ளதால், உள்ளே சென்ற பொம்மி சிக்கிக்கொண்டார். இதனால், செய்வதறியாது திகைத்துப்போன பொம்மி, மீண்டும் மீண்டும் வெளியே வர முயற்சி செய்துள்ளார். இதனால், பொம்மிக்கு சிராய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, பொம்மிக்கு பயம் தொற்றிக்கொள்ள உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு கேட்டுக்கும்படி அதிக சத்தத்துடன் கூச்சலிட்டுள்ளார். பொம்மியின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்து அப்பகுதி மக்கள் பார்த்தபோது, பொம்மி மாட்டியிருப்பது தெரியவந்தது. அவர்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தபோதும், பொம்மியை வெளியே கொண்டு வரமுடியவில்லை. இதையடுத்து, பொம்மியின் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தீயணைப்பு துறையினர் மீட்பு:
கிடைத்த தகவலின்படி, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, 2 வீட்டின் சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த பொம்மியை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மீட்பு பணியின்போது பொம்மியின் முதுகு, முகம், கைகளில் சிராய்ப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.