Selvaraghavan : “ஆயிரத்தில் ஒருவன் 2” உருவாகுமா? இயக்குநர் செல்வராகவன் சொன்ன தகவல்!
Director Selvaraghavans Aayirathil Oruvan 2 : தனது தந்தை கஸ்தூரி ராஜாவைத் தொடர்ந்து, படங்களை இயக்கிவந்தவர் செல்வராகவன். இவர் நடிகர் தனுஷின் சகோதரனும் ஆவார். இவரின் இயக்கத்தில் வெளியாகி தற்போதுவரையிலும் மக்களால் பேசப்பட்டுவரும் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்குவது குறித்து செல்வராகவன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலம் மிக்க இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் செல்வராகவன் (Selvaraghavan) . இவரின் இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரின் முன்னணி இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) . இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி (Karthi) கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் இவருடன் நடிகர்கள் பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஜெரோமியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமானது சோழர்களின் வாழ்க்கை (Life of the Cholas) பற்றியும், சாதாரண மனிதர்களிடம் இருந்து மறைந்து வாழும் சோழ மக்களை பற்றியும் மிகவும், வித்தியாசம் கதைக்களத்துடன் அமைந்திருந்தது. இந்த படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் (G.V. Prakash) இசையமைத்திருந்தார்.
ஆரம்பத்தில் இப்படத்திற்காக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வந்த நிலையில், செல்வராகவனுக்கு, இவருக்கும் இடையே நடந்த பிரச்சனை காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படத்தின் பாகம் 2 உருவாகவுள்ளதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருந்த நிலையில், அந்த படத்தைக் குறித்து தற்போது பேசியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் சொன்ன விஷயம் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தைப் பற்றி பேசியுள்ளார். அந்த நேர்காணலில் அவர் பேசுகையில், “ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. நான் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அப்டேட்டை கேட்கின்றனர். நாங்கள் பெரிய தவறு செய்துவிட்டோம். ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தின் அறிவிப்பே சீக்கிரமாக வெளியிட்டிருக்கக்கூடாது.
ஏனென்றால் நடிகர் கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் இருக்காது. மேலும் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் கதையை எழுதுவதில் சிக்கல் அதிகமாக இருக்கிறது. இந்த பாகம் 2 படத்தை இயக்க ஆசை எல்லாம் இருக்கிறது. தற்போதுள்ள காலத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை மிக எளிதாக எடுத்துவிடலாம். முதல் பாகத்தை ஒப்பிடும் போது ஈசியாக முடிந்து விடும்.
ஆனால் இந்த படத்தில் நடிகர்கள் நடிப்பதற்கு சுமார் 1 வருடத்திற்கு கால்ஷீட் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. மேலும் இந்த படத்தை உருவாக நேரம் கூட வேண்டும், ஆயிரத்தில் ஒருவன் 2 படமானது விரைவில் தொடங்கும்” என்று இயக்குநர் செல்வராகின் கூறியுள்ளார்.