கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் பாஜக? தமிழிசையின் கருத்தை மறுத்த த.வெ.க..
BJP - TVK Alliance: தமிழ்நாட்டி சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்து பணிகள் அனைத்து கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் திமுக எதிர்க்கும் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தரப்பில் கூட்டணி பேச்சு வார்த்தைகள், தேர்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூட்டணிக்கு நோ சொன்ன விசிக:
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் வருகையை பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். அதனைத் தொடர்ந்து படிப்படியாக கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று கட்சி பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிகக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தார். வி சி க தரப்பில் நீண்ட நாள் கோரிக்கையாக முன்வைக்கப்படும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை த.வெ.க தலைவர் விஜய் முன்வைத்து கூட்டணிக்கு அழைத்தார். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விலக போவதில்லை என்றும் கூட்டணி என்றால் அது திமுகவுடன் தான் என்றும் உறுதியாக குறிப்பிட்டார். அதனைத் தொடரது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் வெளியிடப்பட்டது. மேலும் மத்தியில் இருக்கும் பாஜக அரசையும் மாநிலத்தில் இருக்கும் திமுக அரசையும் எதிர்ப்பதாக முதல் முறையாக அந்த மேடையில் பேசினார்.
த.வெ.க – பாஜக கூட்டணியா?
இதுபோன்ற சூழலில் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முக்கியமாக தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்த போது எடப்பாடி தலைமையிலான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு சந்திப்பை மேற்கொண்டனர். இது ஒரு பக்கம் இருக்க பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் இன்னும் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கப்படவில்லை. ஆனால் பாமக தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இப்படி கூட்டணி பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் இந்த கருத்திற்கு பதில் அளித்துள்ளார். ” தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான். பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை தெரிவிக்கவில்லை. பிறர் கூறுவதற்கு நான் பதில் சொல்ல முடியாது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் திமுகவுக்கு எதிராக எல்லோருமே ஒன்று சேர வேண்டிய சூழல் நமக்கு வந்திருக்கிறது. திமுக ஆட்சி அடுத்த முறை வெற்றி பெறாமல் இருக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக உடன் கூட்டணி இல்லை என த.வெ.க திட்டவட்டம்:
ஆனால் தமிழிசையின் இந்த கூற்றை தமிழக வெற்றி கழகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் ” திமுகவுடனும், பாஜக உடனும் கூட்டணி இல்லை என்றும் கூட்டணி தொடர்பாக நாங்கள் சொல்வது அனைத்துமே தவெக தலைவர் விஜய் தெரிவித்த வார்த்தையை ஆகும். கூட்டணி குறித்து தலைவர் விஜய் தெரிவித்த நிலைப்பாட்டை நாங்களும் தெரிவிக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை அதே போல் கூட்டணி குறித்து கேள்வி மீண்டும் மீண்டும் கேட்க தேவை இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.