Jaishankar : பஹல்காம் தாக்குதலை போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.. அமைச்சர் ஜெய்சங்கர்!
External Affairs Minister Jaishankar's Recent Interview | ஐரோப்பாவுக்கு மாநாட்டுக்காக சென்றிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பேசியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆம்ஸ்டர்டம், மே 22 : ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தொடர்கிறது என்றும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை (Pahalgam Terror Attack) போல மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால் இந்தியா அதற்கு பதிலடி கொடுக்கும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (External Affairs Minister Jaishankar) தெரிவித்துள்ளார். நெதர்லாந்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜெய்சங்கர் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐரோப்பாவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
நெதர்லாந்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐக்கிய நாடுகள் (UN – United Nations) வெளியிட்ட தகவலின் படி இந்தியா பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கியதாக கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (United Nations Security Council) தொடர்ந்து பயங்கரவாதிகள் குறித்தும் அவர்கள் எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பது குறித்தும் பட்டியல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அவரிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. காரணம் அதில் ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஏப்ரல் 22, 2025 அன்று நடந்ததை போல மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றால் நாங்கள் பயங்கரவாதிகளை தாக்குவோம் என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது – ஜெய்சங்கர்
Chaired the regional conference of our Ambassadors in Europe today in Berlin.
We discussed #OpSindoor and our message of zero tolerance for terrorism. Also deliberated on various aspects of more deeply engaging Europe at a time of change. pic.twitter.com/kZSifq9fsf
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 22, 2025
தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் இருந்தால் அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு நாங்கள் தாக்குதல் நடத்துவோம். இதனால் தான் ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் ஆபரேஷ சிந்தூரை தொடர்வது இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது போல் ஆகாது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ நடவடிக்கைகள் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது என்று கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய ஜெய்சங்கர்
அப்போது பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய ஜெய்சங்கர், சமீபத்தில் எங்களுக்கு பாகிஸ்தான் உடன் சண்டை நடைபெற்றது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் இது தொடங்கியது. 26 சுற்றுலா பயணிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கண் முன்னே சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் பொருளாதாரத்தை சீர் குலைத்து மதம் தொடர்பான முரண்பாடுகளை ஏற்படுத்தவே இது நடத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.