ஆன்லைனில் சோபா விற்க முயன்ற இளைஞர்.. ரூ.5.22 லட்சத்தை கொள்ளையடித்த மோசடி நபர்!
Engineer Loses 5.22 Lakh Rupees in Online Scam | நாளுக்கு நாள் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் சோபா விற்பனை செய்ய முயற்சித்து மோசடிக்காரரிடம் ரூ.5.22 லட்சத்தை இழந்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
தொழில்நுட்ப வளர்ச்சி பல வகையான சிறப்பு அம்சங்களையும் நன்மைகளையும் கொண்டிருந்தாலும் அதில் சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாக பயன்படுத்தும் சிலர் சைபர் மோசடிகளில் (Cyber Frauds) ஈடுபடுகின்றனர். பொதுமக்களிடம் இது குறித்து போதிய புரிதல் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் பலர் இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி விடுகின்றனர். அந்த வகையில், ஒடிசாவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் ஆன்லைன் மோசடியில் ரூ.5.22 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இந்த மோசடி நடைபெற்றது எப்படி, பொறியாளர் பணத்தை இழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆன்லைன் மோசடியில் ரூ.5.22 லட்சம் பணத்தை இழந்த பொறியாளர் – எப்படி?
ஒடிசாவை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் ஆன்லைனில் தனது சோபாவை விற்பனை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர் தரப்பில் இருந்து பேசிய அந்த நபர் தன்னை ஒரு பர்னிச்சர் டீலர் என அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார். அந்த இளைஞர் தனது சோபாவை ரூ.10,000-க்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த நிலையில், அவரை தொடர்ப்புக்கொண்டு பேசிய அந்த நபர் ரூ.8,000-க்கு தருமாறு கோரியுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற இளைஞரும் அந்த நபர் பேசிய விலைக்கே சோபாவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த நபர் சோபாவுக்கு பணம் செலுத்துவதற்காக இளைஞரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். ஆனால், பணம் செலுத்த முடிவியவில்லை என கூறி, அந்த நபர் இளைஞரிடம் இருந்து வேறு ஏதேனும் வங்கி கணக்கு உள்ளதா என கேட்டுள்ளார். அதன்படி, இளைஞரின் தாயின் வங்கி கணக்கையும் அவர் வாங்கியுள்ளார். அப்போது அவர் அந்த இளைஞரிடம் தான் தவறுதலாக அவரின் தாயின் வங்கி கணக்கிற்கு பண அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, குறைந்த பட்சம் வங்கி கணக்கில் ரூ.1.5 லட்சம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அந்த இளைஞரும் கடன் வாங்கி அந்த தொகையை தனது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து இளைஞரை தொடர்புக்கொண்டு பேசிய அந்த நபர், தவறுதலாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5.22 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாகவும், அதனை பணமாக கையில் தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், சொல்லியபடி, அந்த நபர் பணத்தை திரும்பி தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.