Vijay Press Meet: முதல்முறை செய்தியாளர் சந்திப்பு.. வேறொரு தருணத்தில்! மதுரை மக்களுக்கு கோரிக்கை வைத்த விஜய்..!

Vijay Speaks to Press: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மதுரைக்குப் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது பயணம் குறித்து விளக்கமளித்தார். கோடைக்கானலிலும் படப்பிடிப்பு நடைபெறும் எனவும், ரசிகர்கள் தன்னைப் பின்தொடர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் அவரது அரசியல் மற்றும் சினிமாப் பயணம் குறித்தும் பேசினார்.

Vijay Press Meet: முதல்முறை செய்தியாளர் சந்திப்பு.. வேறொரு தருணத்தில்! மதுரை மக்களுக்கு கோரிக்கை வைத்த விஜய்..!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

Published: 

01 May 2025 16:08 PM

சென்னை, மே 1: தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam) தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நடிகருமான விஜய், ஜனநாயகன் திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்ல இருக்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜய் (Vijay), மதுரைக்கு புறப்பட்டார். முன்னதாக, பட சூட்டிற்காக இன்று அதாவது 2025 மே 1ம் தேதி காலை 7 மணிக்கு விஜய் மதுரை செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, விஜயை காண்பதற்காக ஏராளமான தவெக தொண்டர்கள் காலை முதலே மதுரை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் இதுகுறித்து பேசிய விஜய், தன்னை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும், மீண்டும் ஒருநாள் உங்களை எல்லாம் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் பேட்டி:

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய விஜய் எப்போதும் மேடைகளில் மட்டுமே தனது கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், செய்தியாளர்கள் முன்னிலையில் பேட்டியளிப்பது இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், மதுரைக்கு கிளம்பும் முன் சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய் கூறியதாவது, “எல்லாருக்கும் வணக்கம்! உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள். நான் இன்றைக்கு மதுரைக்கு ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக செல்கிறேன். மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்கிறேன். கூடிய விரைவில் மதுரை மண்ணுக்கு கட்சி சார்பில் வேறுவொரு சந்தர்ப்பத்தில் உங்களை எல்லாம் சந்தித்து பேசுகிறேன். ஆனால் இன்று உங்களை எல்லாம் மதுரை விமான நிலையத்தில் சந்தித்து என் வேலைக்காக கொடைக்கானல் செல்ல இருக்கிறேன்.

விஜய் பேட்டி அளித்த காட்சி:

நீங்களும் பாதுகாப்பாக அவரவர் வீட்டிற்கு செல்லுங்கள். நீங்கள் யாரும் என்னுடை வேனிற்கு பின்னாடியோ, காருக்கு பின்னாடியோ வர வேண்டும். அதிலும், குறிப்பாக பைக்கில் வேகமாக வருவதோ, ஹெல்மெட் இல்லாமல் பைக் மூலம் என்னை பின் தொடர்வதோ வேண்டாம். இதுபோன்ற காட்சிகளை நான் ஏற்கனவே பார்த்து என்னை பதட்டம் அடைய செய்தது. விரைவில் உங்களை எல்லாம் நிச்சயம் சந்திப்பேன். அதுவரைக்கும் என்னுடைய மே தின வாழ்த்துகள். Love You All, See You All.

இந்த கருத்துகளை என்னால் மதுரை விமான நிலையத்தில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அங்கு சூழ்நிலை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அதனால், சென்னை விமான நிலையத்தில் சொல்லிவிட்டு கிளம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.