சென்னை அருகே பயங்கரம்.. இளைஞர்கள் 2 பேர் கொடூர கொலை.. நடந்தது என்ன?
Chennai Double Murder : சென்னை அருகே மறைமலை நகர் பகுதியில் இளைஞர் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சக நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, கஞ்சா போதையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், இரண்டு பேரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதாகி உள்ளனர்.

சென்னை, மே 11 : சென்னை அடுத்த, மறைமலை நகர் பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில் விமல், ஜெகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை அடுத்த மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமல் (22) மற்றும் ஜெகன் (24). இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்த நிலையில், சம்பவத்தன்று தங்களது சக நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.
சென்னையில் இரட்டை கொலை
அப்போது, நண்பர்கள் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது, ஒருவரைக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த பிரச்னையில் அங்கிருந்த இரண்டுக்கு சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்ததை அடுத்து, அங்கிருந்து அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து, போலீசார் இருவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தது விமல் மற்றும் ஜெகன் என தெரியவந்துள்ளது.
நடந்தது என்ன?
மேலும், முதற்கட்ட விசாரணையில், விமல் மற்றும் ஜெகன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், கொலை நடந்தபோது, பலரும் கஞ்சா போதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. இரட்டைக் கொலையில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் அடுத்த மறைமலை நகரில் நடந்த இரட்டை கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருப்பினும் கொலை சம்பவங்கள் நாள்தோறும் தலைப்பு செய்திகளாக வருகிறது. இதனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர். அண்மையில், கூட, ஈரோட்டில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நகை பணத்துக்காக தம்பதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள், அடுத்த இரட்டை கொலை நடந்துள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.