சேகர்பாபு, புயல்பாபுவாக செயல்படுகிறார்.. சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணாமலைபுரத்தில் 32 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறையின் சாதனைகளைப் பற்றிப் பேசிய அவர், 4 ஆண்டுகளில் 1800 திருமணங்கள் நடத்தப்பட்டதாகவும், 3107 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகவும் சாதனைகளை பட்டியலிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் - சேகர்பாபு
சென்னை, ஜூலை 2: உண்மையான பக்தர்கள் நலனுக்காக திமுக அரசு செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமண சீர்வரிசைகளுடன் கூடிய திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த நிகழ்ச்சிக்கு நான் வர வேண்டும் என 10 நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு அழைத்திருந்தார். இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் தட்டாமல் செல்வதுண்டு. இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு நிகழ்ச்சிகளில் நான் அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்வில் தான் அதிகம் கலந்து கொண்டுள்ளேன். அறநிலையத்துறை சார்பில் இந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1800 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. அதில் இன்றைக்கு (ஜூலை 2) 576 திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது. இதில் 150 திருமணங்களை நான் தலைமையேற்று நடத்தி வைத்துள்ளேன்.
திராவிட மாடல் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை மகத்தான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆன்மிக மொழியில் சொல்ல வேண்டும் என்றால் அடியார்க்கு அடியார் போல சேகர்பாபு உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சேகர்பாபு , செயல்பாபுவாக மட்டுமின்றி புயல் பாபுவாகவும் மாறியுள்ளார். அதனால் இந்த திமுக ஆட்சியில் பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக திகழ்ந்து வருகிறோம்.
இந்து சமய அறநிலையத்துறை சாதனைகள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் சிலவற்றை குறிப்பிடலாம். எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு 3,107 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். 997 கோயில்களுக்கு சொந்தமான 7,791 கோடி ரூபாய் மதிப்பிலான 7,650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. 2,03, 444 ஏக்கர் நிலம் அளவிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் கோடி மதிப்பிலான திருக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
வெறுப்போடும், சமூகத்தை பிளவுப்படுத்தும் எண்ணங்கள் கொண்டவர்களாகவும் இருப்பவர்களால் திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் செய்யப்பட்டுள்ள சாதனைகளை கண்டு சகித்து கொள்ள முடியவில்லை. பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுபவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஆனால் உண்மையான பக்தர்கள் திமுக ஆட்சியின் ஆன்மிக தொண்டை பாராட்டுகிறார்கள். நேற்று ஒரு வாரப்பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் போட்டிருந்தார்கள்.
நான் கவலைப்பட மாட்டேன்
என்ன கார்ட்டூன் என்றால், நான் காவடி எடுப்பது போலவும் அமைச்சர்கள் அலகு குத்திக்கொண்டு தரையில் உருள்வது போல வரைந்திருந்தார்கள். அதனைப் பார்க்கும் போது எனக்கும் சிரிப்பு வரவில்லை. பரிதாபமாக தான் இருந்தது. பக்தி தான் அவர்களின் நோக்கம் என்றால் ஆன்மிகத்துக்கு திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டியிருக்கலாம். ஆனால் அவர்களின் நோக்கம் பல ஆண்டுகால வன்மம் நிறைந்தது. என்னுடைய பணி மக்கள் பணியாகும். அவர்களுக்கு என்ன தேவை அறிந்து செய்வது தான் என்னுடைய பணியாகும்.
இதெல்லாம் பார்த்து நான் கவலைப்படமாட்டேன். இதெல்லாம் எனக்கு ஊக்கம், உற்சாகமளிக்கக்கூடியது. திருநாவுக்கரசர் சொல்வது போல என் கடன் பணி செய்து கிடப்பதே.. அதனால் என்னை கேலி, கிண்டல், விமர்சனம், கொச்சைப்படுத்தினாலும் நான் கவலைப்படப்போவதில்லை. உண்மையாக பக்தர்களில் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம்” என முதலமைச்சர் கூறியுள்ளார்.