சில்லென மாறிய சென்னை.. அடுத்த 10 நாட்களுக்கு மழை தொடரும் – பிரதீப் ஜான் தகவல்..
Tamil Nadu Weather Update: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை இருக்கும் எனவும் இதனால் உஷ்ணம் தனியும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரம், ஜூலை 3, 2025: தமிழகத்தில் கடந்த வாரம் முதல் பருவமழையின் தீவிரம் குறைய தொடங்கிய நிலையில் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதிகரிக்கும் வெப்பநிலையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து தூத்துக்குடியில் 37.3 டிகிரி செல்சியசும், தஞ்சாவூரில் 37 டிகிரி செல்சியசும் பதிவானது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.6 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 359 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதிகரிக்கும் வெப்பநிலைக்கு மத்தியில் சென்னையில் ஜூலை 2 2025 தேதியான நேற்று நகரில் பல்வேறு பகுதிகளில் பலத்தை காற்றுடன் கூடிய கன மழை பதிவானது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மிதமான மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையானது ஜூலை 8 2025 வரை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லென மாறிய சென்னை:
அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலை நிலவிய நிலையில் ஜூலை 2 2025 தேதியான நேற்று இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பதிவானது. இதன் காரணமாக பூமியின் உஷ்ணம் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு, போரூர், அண்ணா நகர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே. நகர், கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பதிவானது.
அடுத்த 10 நாட்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும் – பிரதீப் ஜான்:
🌧️ Rain Update for KTCC & North TN – Some Relief after 10 Dry Days
————————–
After nearly 10 dry days in KTCC (Chennai and other surrounding districts), there’s some hope on the horizon! Starting today, we can expect short spells of rain across various parts of…— Tamil Nadu Weatherman (@praddy06) July 2, 2025
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ள பதிவில், காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழை மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் இருக்கக்கூடும் எனவும் நகரின் அனேக பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் தவறவிட்ட மழையை இந்த மழை பூர்த்தி செய்யும் எனவும், இது பருவகால மழை அல்லாமல் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை எனவும் தெரிவித்துள்ளார்.