முடிவுக்கு வந்த கோடை காலம்.. அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை.. பிரதீப் ஜானின் வானிலை ரிப்போர்ட்..

Weather Report: தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக அடுத்த 10 நாட்களில் உருவாக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

முடிவுக்கு வந்த கோடை காலம்.. அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை.. பிரதீப் ஜானின் வானிலை ரிப்போர்ட்..

கோப்பு புகைப்படம்

Published: 

17 May 2025 10:37 AM

கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இதற்கிடையில் இந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் தொடங்கக்கூடிய தென்மேற்கு பருவமழையானது மே 13ஆம் தேதியே தொடங்கிவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38.3 டிகிரி செல்சியசும், கடலூரில் 38 டிகிரி செல்சியசும், மதுரையில் 37 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரை நுங்கம்பாக்கத்தில் 36.9 டிகிரி செல்சியசும், மீனம்பாக்கத்தில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

முடிவுக்கு வந்த கோடை காலம்:


தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வெப்பநிலை என்பது குறைந்து காணப்படுகிறது. மேலும் கோடை காலம் நேற்றுடன் அதாவது மே 16ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அவரது பதிவில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்டா மாவட்டங்களில் அடுத்த ஒரு சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் இந்த ஆண்டு இதுவரை எந்த இடத்திலும் வெப்ப அலை பதிவாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ 2025 ஆண்டு மே மாதத்தில் சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகாது. இது 2022 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இருந்தது போலவே இந்த ஆண்டும் இருக்கும். அதேபோல், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை என்பது அரபியன் கடலிலும், வங்க கடலிலும் உருவாக கூடும் என்றும் அரபிக் கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக அடுத்த 10 நாட்களில் உருவாகக்கூடும். வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை மே 18 2025 அன்று இந்த சுழற்சி வட தமிழகம் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய கடலோர பகுதிகளுக்கு அருகில் வரும் காரணத்தால் காற்றுடன் கூடிய மழை இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

எங்கெல்லாம் மழை இருக்கும்?


மேலும், “ இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் வட உள் தமிழ்நாடு முதல் டெல்டா மாவட்டங்கள் வரை மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. சென்னை பொறுத்த வரையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். மே மாதங்களில் சென்னையில் மழைப்பொழிவு என்பது மிகவும் அரிதான ஒன்று” என குறிப்பிட்டுள்ளார்

தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக செங்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஒகேனக்கல் தர்மபுரி மாவட்டம், பெலந்துறை கடலூர் மாவட்டம், பம்பர் அணை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்றைய தினத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது