கோடை விடுமுறை நீட்டிப்பு? பள்ளி திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய தகவல்!
Tamil Nadu School Reopen : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பள்ளி திறப்பு குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். ஏற்கனவே, ஜூன் 2ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவித்த நிலையில், வெயிலின் தாக்கம் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை, மே 01: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் (Tamil Nadu Heatwave) அதிகரித்துள்ள நிலையில், பள்ளி திறப்பு (Summer Holiday) குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Minister Anbil Mahesh) கூறியுள்ளார். ஏற்கனவே, ஜூன் 2ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவித்த நிலையில், வெயிலின் தாக்கம் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. 2025 ஏப்ரல் மாதத்தில் மத்தியில் இருந்து கோடை விடுமுறை தொடங்கியது.
கோடை விடுமுறை நீட்டிப்பா?
1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 ஏப்ரல் 18ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு 2025 ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டதட்ட சுமார் 55 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் கோடை வெயில் வெளுத்து வருகிறது. 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இன்னும் சில நாட்களில் அக்னி வெயில் தொடங்க உள்ளது.
இதனால், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வெயில் ஜூன் வரையும் இருக்கும். இதனால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
அப்போது, கோடை விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்தால், மே மாதம் இறுதியில் பதிவாகும் வெப்பநிலையை பொறுத்து, பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுவது குறித்து முடிவு எடுப்போம்” என்று கூறினார். தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “2009ஆம் ஆண்டு முதல் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணம் செய்வது தொடர்பாக ஒரு ஆணையம் அமைத்துள்ளோம். எனவே, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்” என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.