திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா?.. ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸின் முக்கிய அறிவிப்பு.. அரசியல் களத்தில் பரபரப்பு!
ராகவா லாரன்ஸின் இந்த அரசியல் நகர்வுக்குப் பின்னால் சில சுவாரசியமான சினிமா மற்றும் அரசியல் நட்புகள் பின்னணியாகப் பார்க்கப்படுகின்றன. த.வெ.க தலைவர் விஜய்யுடன் 'திருமலை' உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள ராகவா லாரன்ஸ், அவருடன் நீண்ட கால திரையுலக நட்பைக் கொண்டவர் ஆவார்.
சென்னை, ஜுன் 07: தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பரபரப்புகள் நிலவி வரும் சூழலில், பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஜூன் 11-ஆம் தேதி காலை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களிலுமே மாபெரும் வெற்றி பெற்றார்.
இதையும் படிக்க: “ஒரு நல்ல படம் கூட தராதவர், நல்ல ஆட்சி தருவாரா?” முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
தவெக வேட்பாளர் யார்?
சட்டமன்ற விதிகளின்படி ஒரு தொகுதியை அவர் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இன்னும் சில மாதங்களில் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் தவெக சார்பில் களம் இறங்கப்போவது யார் என்ற பலத்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் யூகங்கள்
Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms.
All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I… pic.twitter.com/68ZyN6P0l9
— Raghava Lawrence (@offl_Lawrence) June 7, 2026
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த யூகங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது குறித்துத் தனக்கு நெருக்கமானவர்களும், ஊடக நண்பர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாக ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தற்போது நான் ‘பென்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் 10-ஆம் தேதியோடு முழுமையாக நிறைவடைகின்றன. அதனைத் தொடர்ந்து, மறுநாளான ஜூன் 11-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9:00 மணிக்கு இது குறித்த எனது அதிகாரப்பூர்வமான நேரடி அறிவிப்பை வெளியிட உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘மாற்றம்’ ஹேஷ்டேக் தந்த க்ளூ:
ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள ஹேஷ்டேக்குகள் அவர் அரசியல் பிரவேசம் செய்யப் போகிறாரா என்ற விவாதத்தை பலப்படுத்தியுள்ளது. அவர் தனது பதிவில் #மாற்றம் மற்றும் #ServiceGod (சேவையே கடவுள்) ஆகிய இரண்டு முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இது அவர் தவெக-வில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான மறைமுக சமிக்ஞையாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விஜய் – ரஜினி நட்பு பின்னணி:
ராகவா லாரன்ஸின் இந்த அரசியல் நகர்வுக்குப் பின்னால் சில சுவாரசியமான சினிமா மற்றும் அரசியல் நட்புகள் பின்னணியாகப் பார்க்கப்படுகின்றன. த.வெ.க தலைவர் விஜய்யுடன் ‘திருமலை’ உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள ராகவா லாரன்ஸ், அவருடன் நீண்ட கால திரையுலக நட்பைக் கொண்டவர் ஆவார். மற்றொருபுறம், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க ஆயத்தமான காலம் முதற்கொண்டே அவருடன் தீவிரமான ஆன்மீக மற்றும் அரசியல் நெருக்கத்தைக் கடைப்பிடித்து வந்தவர் லாரன்ஸ்.
இதையும் படிக்க: “தவெக-வுக்கு கொள்கை, கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும் கிடையாது!”.. சரமாரியாக விளாசிய முத்தரசன்!
இப்படிப்பட்ட சூழலில், அவர் விஜய் தலைமையிலான த.வெ.க-வின் ஆதரவோடு தேர்தல் களத்தில் குதிக்கப் போகிறாரா அல்லது தனது சமூக சேவை அறக்கட்டளை சார்ந்த ஏதேனும் அறிவிப்பை வெளியிடப் போகிறாரா என்பது ஜூன் 11-ஆம் தேதி காலை 9 மணிக்குத் தெரியவரும்.