பாமகவில் குழப்பம்.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி அப்செட்.. ராமதாஸ் சொன்ன விஷயம்!

PMK Ramadoss Anbumani : தைலாபுரம் தோட்டத்தில் 2025 மே 16ஆம் தேதியான இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களாகவே, அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், அன்புமணி இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

பாமகவில் குழப்பம்..  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி அப்செட்..  ராமதாஸ் சொன்ன விஷயம்!

ராமதாஸ் - அன்புமணி

Updated On: 

16 May 2025 12:19 PM

சென்னை, மே 16 :  பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்ள்  கலந்து கொள்ளவில்லை.  ராமதாஸ் உள்ளிட்ட வெறும் 20 பேர் மட்டுமே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) பல மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, அன்புமணி, மற்றும் ராமதாஸ் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. அண்மையில் கூட, தனது பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்ததை அடுத்து, பிரச்னை ஏற்பட்டது. மேலும், 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும், ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. சமீபத்தில் கூட, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்பட உள்ளதாகவும் ராமதாஸ் அறிவித்தது கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பியது.

கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி

அதே நேரத்தில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைரவாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால், அன்புமணிக்கும், ராமாதாஸுக்குமான மோதல் உச்சத்தை எட்டியது. இப்படி இருவருக்கும் அதிகாரப் போட்டி நிலவி வரும் நிலையில், மே 16ஆம் தேதியான இன்று   பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தைலாபுரத்தில் நடந்தது.

இதற்கு  ராமதாஸ் தலைமை  தாங்கினார். இந்த கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. பாமகவில் மொத்தம் 108 நிர்வாகிகள் இருக்கும் நிலையில், வெறும் 20 பேர் கலந்து கொண்டதாக தெரிகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் ராவணன், இளைஞரணி செயலாளர் முகுந்தன் உள்ளிட்டோரை கலந்து கொண்டார்.

அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை. தங்களது விருப்பத்திற்கு மாறாக இந்த கூட்டம் நடைபெறுவதால், அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தாக தெரிகிறது. முன்னதாக, 2025 மே 11ஆம் தேதி நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டிலும் ராமதாஸ் பேச்சுக்கு எதிர்ப்பு இருந்தது.

மேலும், அக்கூட்டத்தில் அன்புமணிக்கு ஆதரவாக நிர்வாகிகள் செயல்படுவதை விமர்சித்ததாக தெரிகிறது. இதனால், அப்பா மகன் இருவருக்கும் இடையே பிரச்னை பெருசாக வெடித்தது. இதனால், அன்புமணியும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் தான், அன்புமணி இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், “சிங்கத்தின் கால்கள் பழுதாகாத போது, சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும். ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ன்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக் கொடுத்தேன். 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான கூட்டம் இது. செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால், விரும்பியடி மாற்றப்படுவார்கள். பாமகவில் கோஷ்டி மோதல் இல்லை” என்று தெரிவித்தார்.