ரூ.1000 கோடி ஊழல்.. சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு!

TASMAC ED Raid In Chennai : ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக, சென்னையில் உள்ள டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தி.நகர், திருவல்லிக்கேணி, மணப்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதில், பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது.

ரூ.1000 கோடி ஊழல்.. சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு!

டாஸ்மாக்

Updated On: 

16 May 2025 11:11 AM

சென்னை, மே 16 : டாஸ்மாக் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (Tasmac ED Raid) தமிழகத்தில் முழுவதும் சோதனையை மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் முகவர்களுடன் தொடர்புடைய இடங்களில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, சென்னையில் தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்திலும் சோதனை நடந்து வருகிறது.  தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறையின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு

டாஸ்மாக் கடைகள் மூலம் ஒருநாளைக்கு 100 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், டாஸ்மாக் வழக்கு திமுகவுக்கு பெரும் சிக்கலையும் கொடுத்து வருகிறது. அதாவது, 2025 மார்ச் மாதம் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

2025 மார்ச் 6ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து, மதுபானங்கள் கொள்முதல், டெண்டர் விடுவதில் முறைகேடு, பார் உரிம டெண்டர்கள் உட்பட பல்வேறு வழிகள் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது. மேலும், மதுபானம் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

பின்னணி என்ன?

மதுபான தொழில்சாலைகள் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சப்ளை ஆர்டர்களுக்காக லஞ்சம் வழங்குதல் மற்றும் டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் சில்லறை டாஸ்மாக் கடைகளில் இருந்து லஞ்சம் வசூலித்தல் ஆகியவற்றிலும் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை நடத்தி வருகிறது.  இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது. இதற்கிடையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.  எனவே, டாஸ்மாக் வழக்கு திமுகவுக்கு பெரும் சிக்கலை கொடுத்து வருகிறது. இந்த நிலையில், 2025 மே 16ஆம் தேதியான இன்று காலை முதலே டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகிளல்  அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

குறிப்பாக, தேனாம்பேட், சூளைமேடு, மணப்பாக்கம், சேத்துப்பட்டு, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.  மேலும், பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும், திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக் குமார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.