மே மாதத்தில் வெப்ப அலை நாட்கள் இரட்டிப்பாகும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
IMD Predicts 7 Days of Extreme Heat in May 2025 | தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ள நிலையில் மே 5, 2025 முதல் கத்தரி வெயில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், மே மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, மே 1 : தமிழகத்தில் கோடை வெயில் (Summer) தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக ஒருசில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பொதுவாக கத்தரி வெயிலின் போது வெயிலின் தாக்கம் தீவுரமாகும் நிலையில், மே 5, 2025 முதல் தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், மே மாதத்தில் வழக்கத்தைம் விட வெப்பமான வானிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD – Indian Meteorological Department) கூறியுள்ளது.
மே மாதத்தில் 7 நாட்கள் வெப்ப அலை நிலவும்
இது குறித்து கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. வெப்ப அலை நாட்கள் வழக்கமாக மூன்று நாட்கள் நிலவும் நிலையில் 2025, மே மாதத்தில் 7 நாட்கள் நிலவும் என கூறப்படுள்ளது. மே மாதத்தில் வரலாறு காணாத வெப்பம் நிலவும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, பகல் மற்றும் இரவு நேரத்திலும் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மே மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட குறைவான வெப்பநிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை 1 முதல் 4 நாட்கள் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மழைப்பொழிவும் இயலைபை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது மே மாதத்தில் வழக்கமாக 64 மில்லி மீட்டர் மழைப்பொழிவு ஏற்படும் நிலையில் 2025, மே மாதத்தில் 70 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு பகுதிகள், மத்திய பகுதிகள் மற்றும் கிழக்கு பகுதிகளில் மழையின் அளவு 10 சதவீதம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நாடு முழுவதும் பருவமழை இயல்பைவிட 105 சதவீதம் மழை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.