2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு படுதோல்விதான்… திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடல்!

Edappadi Palaniswami Criticized: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் ஆதிக்கத்திற்கு எதிராகப் பேசாமல், திமுக அரசை அவதூறாகப் பேசுவதாகவும், பாஜகவின் தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தனியார் பள்ளிகளுக்கான நிதியைத் தாமதப்படுத்துவதாகவும், மும்மொழிக்கொள்கை மிரட்டலில் அடிபணியாத திமுக அரசைக் குறை கூறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு படுதோல்விதான்... திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாடல்!

ஆர்.எஸ்.பாரதி - எடப்பாடி பழனிசாமி

Published: 

17 May 2025 17:28 PM

சென்னை, மே 17: தமிழ்நாட்டில் 50 ஆண்டுகாலத்திற்கும் மேலாக திமுக (DMK)வும், அதிமுகவும் (AIADMK) மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இந்த பிரதான கட்சிகளில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் இருக்கும். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அரசின் ஆதிக்கத்தை கேள்வி கேட்க எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு அரசை குற்றம் சுமத்தி அவதூறு பேசுகிறார் என்றும், பாஜகவின் வாட்சப் யூனிவர்சிட்டி தகவல்களை அறிக்கையாக எடுஹ்து கொண்டிருக்கிரார் பழனிசாமி என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையின் முக்கிய தகவல்:

  • காலை விடிந்ததும் திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு எதிராக எந்த அவதூறைப் பரப்பலாம் எனப் பித்தாலாட்ட அரசியல் செய்யலாம் என்பதை முழுநேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
  • தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய ரூ. 617 கோடியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லியில் இருக்கும் மத்திய அரசை காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்.
  • தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்யும் திட்டங்களால் இன்றைக்கு அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை 74 சதவீதம் உயர்ந்து வரலாற்றுச் சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது.
  • தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய ரூ. 2152 கோடியை ஒதுக்குவோம் என மிரட்டியது மத்திய அரசு, மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிய இது ஒன்றும் அதிமுக ஆட்சி அல்ல, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசு, அந்தத் தொகையையும் மாநில அரசே ஏற்கும் என அறிவித்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காத்து நின்றது.
  • தமிழகத்தில் எப்படியாவது நெருக்கடியை கொடுத்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி கனவை சிதைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 617 கோடியை தராமல் இழுத்தடித்து வருகிறது மத்திய பாஜக அரசு, இது குறித்துப் பல்வேறு நிலைகளில் வலியுறுத்திய போதும் தலைமைச் செயலாளர் மூலம் கடிதம் அளித்துள்ள போதும் அமைதிக் காத்து தனது தமிழ்நாட்டிற்கு எதிரான தனது சதியை நடத்திக் கொண்டிருக்கிறது.
  • இந்த ஆதிக்கத்தைக் கேள்வி கேட்காமல் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு அரசைக் குற்றம் சுமத்தி அவதூறு பேசியிருக்கிறார். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் எனும் பொறுப்பிற்குக் கொஞ்சமும் தகுதியற்ற முறையில் பாஜகவின் வாட்சப் யூனிவர்சிட்டி தகவல்களை அறிக்கையாக வாந்தி வெளியிட்டு கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
  • தனது ஆட்சியையே தமிழ்நாட்டு உரிமைகளைப் பாஜகவிடம் அடகு வைக்கும் அடிமை விளையாட்டாக நடத்திய எடப்பாடி பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது.
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்தக் கோமாளித் தனங்களைக் கேலிக் கூத்துகளாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தலில் மற்றுமொரு படுதோல்வியைப் பரிசாகத் தந்து பழனிசாமியின் பித்தலாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் காத்திருக்கிறார்கள்.

என்று குறிப்பிட்டிருந்தார்.